Published : 06 Nov 2019 10:21 AM
Last Updated : 06 Nov 2019 10:21 AM

ஆசிரியருக்கு அன்புடன்! 5- வானவில் படையே போகலாமா!

ரெ.சிவா

பெலிதாங் வளமான தீவு என்றாலும் வசதியற்ற குழந்தைகளுக்கான அரசுப்பள்ளி, முகமதியா கேங்டாங் தொடக்கப் பள்ளி. குழந்தைகளும் பெற்றோர்களும் வரத் தொடங்கிவிட்டனர். இதுவரை ஒன்பது குழந்தைகள் வந்திருக்கிறார்கள். ஆசிரியை ‘இன்னும் ஒரு குழந்தை’ என்று எதிர்நோக்கியபடி வாசலில் காத்திருக்கிறார். அரசு விதியின்படி பத்து மாணவர்கள் இருந்தால்தான் பள்ளியை நடத்த முடியும். ஏழைக் குழந்தைகள் பெறப்போவது கல்வியா? கூலி வேலையா? என்ற துடிப்போடு காத்திருத்தல் தொடர்கிறது.

பதினோரு மணி வரை காத்திருப்போம் என்று தலைமையாசிரியர் கூறுகிறார். ஒன்பது குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் பள்ளிக்கூரையின் ஓட்டைகள் வழியே வகுப்பறைக்குள் வந்திருக்கும் சூரிய ஒளியும் காத்திருக்கின்றார்கள். எப்படியாவது ஒரு குழந்தையை அழைத்து வருகிறேன் என்று ஆசிரியை சைக்கிளை நெருங்கும்போது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த ஓடிவருகிறான் அந்தக் குழந்தை. பள்ளியை நடத்தலாம் என்று அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். கல்வியாண்டு தொடங்குகிறது. அதே வேளையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை களைக்கட்டுகிறது.

வானவில் எப்படித் தோன்றுகிறது?

இரவெல்லாம் மழை. பள்ளியைச் சுத்தம் செய்வது, சாக்பீஸ் துண்டுகளைக் காய வைப்பது, மரக்கட்டைகளால் சுவருக்குமுட்டுக்கொடுத்து சரிசெய்வது ஆகிய வேலைகளை தலைமையாசிரியர் செய்கிறார். அன்று பள்ளிக்குள் இருக்க முடியாதுஎன்பதால் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்கிறார் ஆசிரியை முஸ்லிமா. புல்வெளி, பாறைகள், கடற்கரை என்று செல்லும் இடமெல்லாம் கொண்டாட்டமாக இருக்கிறார்கள். கடற்கரையில் வானவில்லைப் பார்த்து மகிழ்கிறார்கள். வானவில் எப்படித் தோன்றுகிறது? அதிலுள்ள நிறங்கள் என்னென்ன? என்று லின்டாங் அனைவருக்கும் கூறுகிறான். படிப்பதில் ஆர்வமிக்க அவன் கணக்கில் மிகவும் திறமையானவன்.

“வானவில் படையே போகலாமா!” என்று ஆசிரியை அழைக்கிறார். அனைவருக்கும் அப்பெயர் மிகவும் பிடித்துவிடுகிறது. இயற்கையில் இருந்து நாள் முழுவதும் கற்ற நிறைவோடு அனைவரும் திரும்புகின்றனர்.

இங்குதான் இருப்பேன்!

சில மாதங்களாகச் சம்பளம் வரவில்லை. தனியார் பள்ளியில் நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அழைக்கிறார்கள். குடும்ப சூழல் காரணமாக அங்கு வேலைக்குச் சென்றால் என்ன என்று ஆசிரியை முஸ்லிமாவின் தந்தையின் நண்பரான தலைமையாசிரியர் கேட்கிறார். “இங்குதான் இருப்பேன். வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கத் துணி தைப்பது உதவுகிறது” என்கிறார் ஆசிரியை முஸ்லிமா. “இந்தப் பள்ளியில் இனிமேல் தொடரமுடியாது, தனியார் பள்ளிக்குச் செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஆசிரியர் பக்ரி வேலையை ராஜினாமா செய்கிறார்.

“ஏழைக் குழந்தைகளுக்கு கற்கும் உரிமை இல்லையா? நாம் இன்னும் அதிகமாக உழைப்போம். நமது பள்ளியின் சிறப்பைஅனைவருக்கும் தெரியச் செய்வோம்” என்று உறுதி கொள்கிறார் முஸ்லிமா.

வெற்றிக் கோப்பை

"ஆண்டுதோறும் நமது ஊரில் திருவிழா நடைபெறுகிறது. தனியார் பள்ளிக் குழந்தைகள் அங்கே கலைநிகழ்சிகளில் பங்கு பெறுகிறார்கள்.

இந்த ஆண்டு நாமும் கலை நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும். கலை மீது ஆர்வமுடைய மகார் கலைக்குழு தலைவன்” என்று முஸ்லிமா மாணவர்களிடம் கூறுகிறார். மகார் மகிழ்ச்சியோடு கலைக்குழுப் பொறுப்பை ஏற்கிறான்.

தனியார் பள்ளிக் குழந்தைகள் பேண்ட் வாத்தியப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். “நாம் எதுவுமே செய்யவில்லையே?” என்று நம் மாணவர்கள் வருந்துகிறார்கள். மகார் தனியாகக் கத்திக்கொண்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் இருக்கிறான். “இவனைக் குழுத்தலைவனாகத் தேர்ந்தெடுத்தது தவறோ?” என்று் மாணவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆசிரியையிடமும் புகார் அளிக்கிறார்கள்.

தலையில் இலைகளைக் கட்டிக்கொண்டு வகுப்பறைக்குள் வரும் மகார், “நமது கலைநிகழ்ச்சியை முடிவு செய்துவிட்டேன்” என்கிறான். பயிற்சி தொடங்குகிறது. பள்ளிகளுக்கான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. பேண்ட் இசை முடிந்தபின் முகமதியா கேங்டாங் பள்ளி அழைக்கப்படுகிறது. இடையில் இலைகளை கட்டிக்கொண்டும் உடலெங்கும் வண்ணக் கோடுகளுடனும் பழங்குடியினர் போல் வேடமிட்ட மாணவர்கள் ஒரு சிறு பறையுடன் வாயால் பலவித ஓசைகளை எழுப்பிக்கொண்டு நடனம் ஆடுகின்றனர். ஊரார் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். முகமதியா பள்ளி வெற்றிக் கோப்பையைப் பெறுகிறது.

ஊராரின் கவனம் முகமதியா பள்ளி மீது திரும்புகிறது. தனியார் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியும் அங்கு வந்து சேருகிறார். குழந்தைகள் தேடலும் கொண்டாட்டமுமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடாமுயற்சி செய்வோம்!

தலைமையாசிரியர் வயது முதிர்வு, உடல் நலக்குறைவினால் பள்ளியிலேயே மரணமடைகிறார். தந்தைபோல் இருந்தவரின் பிரிவு முஸ்லிமாவை கவலையில் ஆழ்த்துகிறது. பள்ளிக்கு வரமால் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். மாணவர்கள் வருகையும் குறைகிறது.

லின்டாங், இகால் இருவர் மட்டுமே பள்ளிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து சென்று மாணவ மாணவியரைப் பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். லின்டாங் பாடங்களை நடத்துகிறான். மனம் ஆறுதலடைந்து ஆசிரியை பள்ளிக்கு வருகிறார். கற்றல் கொண்டாட்டமாகத் தொடர்கிறது.

வீடு திரும்பும் லின்டாங் தந்தையின் மரணச் செய்தியால் வருந்துகிறான். குடும்பச் சுமை அவனது இளம் தோள்களில். பள்ளியிலிருந்து விலகுகிறான்.

சில ஆண்டுகள் கழித்து இகால் இளைஞனாக ஊர் திரும்புகிறார். நண்பனைச் சந்திக்கிறார். மீனவனான லின்டாங் அவரது மகளைப் படிக்க வைத்திருக்கிறார். இகால் கனவு கண்டபடியே பாரீசில் உயர்கல்வி கற்கச் செல்வதை அறிந்து மகிழ்கிறார்.

குழந்தைகளின் கனவுகள் நிறைவேறவும் சிதையவும் குடும்பச்சூழல் முக்கிய காரணமாக இருக்கிறது. எனினும் எளிய மக்களின் நம்பிக்கையாக அரசுப்பள்ளிகள் இருக்கவேண்டும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x