Published : 06 Nov 2019 07:50 AM
Last Updated : 06 Nov 2019 07:50 AM

விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள் - ஜிம்னாஸ்டிக்ஸ்

பி.எம்.சுதிர்

உலகில் தோன்றிய பழமையான விளையாட்டுகளில் ஒன்று என ஜிம்னாஸ்டிக்ஸைச் சொல்லலாம். கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உடலையும், மனதையும் ஒருங்கிணைப்பதற்காக கிரேக்க நாட்டினர் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டை கண்டுபிடித்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் நாம் காணும் நவீன ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியை வடிவமைத்தவர்கள் என்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜோஹன் கிறிஸ்டஃப்பிரட்ரிக் மற்றும் பிரட்ரிக் லட்விக் ஜான் ஆகியோரைக் கூறலாம்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆசிரியரான ஜோஹன் கிறிஸ்டஃப் பிரட்ரிக்,பண்டைய காலத்தில் இருந்த ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுகளைப் பற்றி ஆய்வு செய்து, அதில் மேலும் சிலவிஷயங்களைச் சேர்த்து ஒரு புத்தகத்தை 1793-ம் ஆண்டு எழுதினார். ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய அந்தப் புத்தகம், பின்னர் “Gymnastics for Youth: or a Practical Guide to Healthful and Amusing Exercises for the use of Schools” என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

உடற்பயிற்சி அளிக்க

ஆரம்பத்தில் புத்தக அளவிலேயே இருந்த நவீன ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியைசெயல்முறையில் வடிவமைத்தவர் பிரட்ரிக் லட்விக் ஜான். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் தந்தை என்று கருதப்படும் இவர், 1800-களில் புரூஷியராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றிய காலத்தில் புரூஷிய ராணுவம் ஒரு போரில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியில் இருந்துராணுவ வீரர்களை மீட்கவும், அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியை அளிக்கவும் ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக் எழுதியபுத்தகத்தைப் பின்பற்றி, ராணுவ வீரர்களுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை அளித்தார் பிரடரிக் லட்விக் ஜான்.

இதற்காக 1811-ம் ஆண்டில் ஜிம்னேஷியம் ஒன்றை அமைத்த அவர், பாரலல் பார்ஸ் ( Parallel Bars), ரிங்ஸ்(rings) மற்றும் ஹை பார் (high bar)உள்ளிட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளுக்கான பயிற்சிகளை அளித்தார் வீரர்களின் உடல் மற்றும் மனநலத்தைப் பேணுவதற்கான பயிற்சிகளைத்தான் ஆரம்ப கட்டத்தில் அவர் அளித்தார்.

இது நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு 1881-ம் ஆண்டில், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு, அமைப்பு ரீதியான ஒரு விளையட்டாக உருவெடுத்தது. இந்த ஆண்டில் ஐரோப்பிய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளுக்கான விதிகள் உருவாக்கப்பட்டன. நாளடையில் இந்த அமைப்பு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பாக மாற்றப்பட்டது.

1896-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்போட்டியில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி அறிமுகமானது. இருப்பினும் 1920-ம் ஆண்டுவரை பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கஅனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக்கில்நாம் இப்போது காணும் பல்வேறு விதமான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் 1956-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒலிம்பிக் போட்டிகளில் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் (ஒன்றிணைந்த ரஷ்யா) ஆதிக்கம் செலுத்தியது. தற்போது அமெரிக்கா, சீனா ருமேனியா உள்ளிட்ட நாடுகளும் இவ்விளையாட்டில் பதக்கங்களை வென்று வருகின்றன.

தீபா கர்மகார்

இந்தியாவின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாக தீபா கர்மகார் விளங்குகிறார். கடந்த முறை நடந்தஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்த இவர் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x