Published : 05 Nov 2019 04:36 PM
Last Updated : 05 Nov 2019 04:36 PM

பிரேக்குக்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்த பெண்: துபாயில் பரிதாபமாக உயிரிழந்த இந்தியச் சிறுமி

துபாய்

துபாயில் பள்ளிக்கு வெளியே நடந்த சாலை விபத்தில் 4 வயது இந்தியச் சிறுமி பரிதாபமாக பலியானார்.

துபாயில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஜெபெல் அலி நகரம் உள்ளது. அங்கே உள்ள பள்ளியில் இந்தியச் சிறுமி ஒருவர் படித்து வந்தார். திங்கட்கிழமை மதியம் பள்ளி முடிந்து, தனது 4 வயது மகளை அழைத்து வர தாய் சென்றார். இருவரும் பள்ளிக்கு வெளியே வந்தனர்.

அப்போது ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் தனது காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக பிரேக்குக்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்தார். இதனால் நிலை தடுமாறிய கார், சிறுமி மீதும் அவரின் தாய் மீதும் மோதியது.

இதனால் மோதிய காருக்கும் அங்கே நின்றுகொண்டிருந்த கார்களுக்கும் இடையில் தாயும், சிறுமியும் மாட்டிக்கொண்டனர். இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் ஆபத்தான நிலையில், என்எம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெபெல் அலி காவல் நிலைய இயக்குநர், பிரிகேடியர் ஜெனரல் அடெல் அல் சுவைதி கூறும்போது, ''வாகன ஓட்டியின் அஜாக்கிரதையே விபத்துக்குக் காரணம். இந்த விபத்தால் அங்கு நின்று கொண்டிருந்த 3 வண்டிகளும் சேதமடைந்தன.

சாலைகளில் குறிப்பாக பள்ளி இருக்கும் பகுதிகளில் வண்டி ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அதேபோல பெற்றோரும் மாணவர்களும் சாலைகளைக் கடக்கும்போது நான்கு புறமும் பார்த்துக் கடக்க வேண்டும்'' என்றார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x