Last Updated : 05 Nov, 2019 12:25 PM

 

Published : 05 Nov 2019 12:25 PM
Last Updated : 05 Nov 2019 12:25 PM

'உன் மனம் சொல்வதைக் கேள்; கனவுகளைத் துரத்து'- பிறந்தநாளில் 15 வயது கோலிக்கு 31 வயது கோலி எழுதிய உத்வேகக் கடிதம்

தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தனக்குத் தானே கடிதம் ஒன்றை எழுதி இணைய உலகை பரபரப்பாக்கியிருக்கிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இடம்பெறாத நிலையில் கோலி பிறந்தநாளை தனது மனைவி அனுஷ்காவுடன் பூடானில் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி ட்விட்டரில் அவர் எழுதியுள்ள கடிதம் உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. 15 வயது கோலிக்கு 31 வயது கோலி கடிதம் எழுதுவதுபோல் அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி, "எனது பயணத்தையும் வாழ்க்கைப் பாடங்களையும் எனக்கு நானே கடிதமாக வரைந்திருக்கிறேன். நான் 15 வயதில் சிக்குவாக இருந்தேன். சிக்குவுக்கு இந்த கடித்தில் என் பயணத்தை விளக்கியுள்ளேன். இதை எழுதுவதில் நான் அதிகம் மெனக்கெட்டிருக்கிறேன். தயவுசெய்து வாசியுங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

#NoteToSelf என்ற ஹேஷ்டேகுடன் அந்த ட்வீட்டைப் பகிர்ந்து அதில் கடிதத்தையும் இணைத்துள்ளார்.

கடித விவரம்:

ஹாய் சிக்கு,

"முதலில் உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உனது எதிர்காலம் குறித்து என்னிடம் கேட்க நிறைய கேள்விகள் வைத்திருப்பாய் என நான் அறிவேன். ஆனால் மன்னிக்கவும். நான் அவற்றிற்கு பதில் சொல்வதாக இல்லை.

ஏனெனில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே ஒவ்வோர் ஆச்சர்யத்தையும் இனிமையாக்கும். ஒவ்வொரு சவாலையும் சிலிர்ப்பூட்டும். ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் படிப்பினை பெறச் செய்யும். இலக்கைவிடப் பயணமே முக்கியம். அந்தப் பயணம் அருமையாக இருக்கும்.

நான் உனக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், வாழ்க்கை உனக்கு மிகப்பெரிய விஷயங்களை கொடுக்கவிருக்கிறது. அதற்கு, உன் வழியில் வரும் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும். வாய்ப்பை எதிர்கொண்டவுடன் அதைப் பற்றிக் கொள். உன்னிடம் இருக்கும் வாய்ப்பை அசட்டை செய்யாதே. அப்படிச் செய்தால் நீ தோல்வியைத் தழுவுவாய். தோல்வி எல்லோருக்கும் நிகழ்வதுதான். ஆனால், தோல்வியில் இருந்து மீண்டு எழுவேன் என்று உனக்கு நீயே உறுதியேற்றுக் கொள். முதல்முறையில் எழ முடியாவிட்டாலும் மீண்டும் முயற்சி செய்.

உன்னைப் பலரும் விரும்பலாம். அதேபோல் பலரும் வெறுக்கலாம். உன்னை அறியாதவர்கள்கூட உன்னை வெறுக்கலாம். அதற்கெல்லாம் வருந்தாதே. தன்னம்பிக்கையை மட்டும் எப்போதுமே இழக்காதே.

இன்று உன் பிறந்தநாளில் அப்பா நீ விரும்பிய ஷூவைப் பரிசளிக்காமல் இருக்கலாம். ஆனால், அன்று உன் தந்தை உன்னை ஆரத்தழுவினாரே, அதற்கு எதுவுமே ஈடாக முடியாது. உன் உயரத்தைப் பற்றி அப்பா சொன்ன பகடியை நினைத்து மகிழ மறந்துவிடாதே. அவர் சில நேரம் உன்னிடம் கடுமையாக நடந்திருக்கலாம். ஆனால், உனக்கு நடப்பதெல்லாம் நன்மையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படிச் செய்திருப்பார்.

அப்பா, அம்மாவுக்கு என்னைப் புரியவே இல்லை என்றுகூட சில நேரம் நீ வருந்தியிருக்கலாம். நீ ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்.. இந்த உலகில் உன்னை உனக்காகவே எந்தவித நிபந்தனையும் இன்றி நேசிப்பது உன் குடும்பம் மட்டுமே. அவர்களுக்கு அன்பையும், மரியாதையையும் திரும்பிச் செலுத்து. அவர்களுக்காக நேரம் ஒதுக்கவும் தவறாதே. அப்பாவிடம் நான் உங்களை நேசிக்கிறேன் எனச் சொல். அதை இன்றே சொல். நாளையும் சொல். அடிக்கடி சொல்.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். உன் மனம் சொல்வதைக் கேள்; உன் கனவினைத் துரத்து, அன்பாக இரு. பெரிதினும் பெரிதான கனவு எப்படி வாழ்க்கையை மாற்றும் என்பதை இந்த உலகுக்கு உணர்த்து. நீ நீயாகவே இரு... அப்புறம் அந்த பரோட்டாக்களை புசித்து மகிழ். எதிர்காலத்தில் அவை சொகுசுப் பொருளாகக்கூட ஆகலாம்...

-ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக ஆக்கு!

விராட்.

என்று எழுதியிருக்கிறார்.

கோலியின் இந்தக் கடிதம் பரவலாக வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x