Published : 04 Nov 2019 10:18 AM
Last Updated : 04 Nov 2019 10:18 AM

டெல்லியில் காற்று மாசுபாடு ‘எமர்ஜென்சி’ அளவுக்கு வந்தது: பள்ளிகளுக்கு நவ.8 வரை விடுமுறை நீட்டிப்பு; சுவாச கோளாறால் பலர் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு, அவசரநிலை அளவுக்கு வந்ததால், 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அறுவடை முடிந்த பின்னர், சருகுகளை விவசாயிகள் எரிப்பதால் டெல்லியில் அதிகளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதனால், விவசாய நிலங்களில் உள்ள சருகுகளை எரிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் போது தடையை மீறி டெல்லியில் ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் ஏற்பட்ட புகை தற்போது டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

காற்றின் தர அளவின்படி (ஏக்யூஐ), 0-50 வரை இருந்தால் நல்லது. 51-100 வரை இருந்தால் போதுமானது. 101-200 வரை இருந்தால் மிதமானது. 201-300 வரை இருந்தால் மோசமான நிலைக்கு சென்று விட்டதாக அர்த்தம். அதேபோல், 301-400 வரைகாற்றின் தரம் இருந்தால் மிக மோசம். 401-500 இருந்தால் மிகத்தீவிரம். 500-க்கு மேல் சென்றால் அவசரநிலைக்கு சென்று விட்டதாக அர்த்தமாகும்.

டெல்லியில் காற்று மாசுபாட்டை கண்காணிக்க 37 மையங்களை அரசு வைத்துள்ளது. அதில் காற்றின் தரம் மோசமாக இருந்தது தெரியவந்தது. அதன்படி, டெல்லியில் அக்.31ம் தேதி இரவில் 480 ஆக இருந்த காற்று மாசு, நவம்பர் 1ம் தேதி அதிகாலையில் 582 புள்ளிகளை தொட்டது.

இதன் காரணமாக டெல்லியில் முதல்முறையாக மருத்துவ அவசரநிலையை (மெடிக்கல் எமர்ஜென்சி) மாநில அரசு நவ.1-ம் தேதி அறிவித்தது. இதனால், டெல்லியில் கனரக வாகனங்கள், கட்டுமான பணிகள், அதிக புகைகளை வெளியிடும் தொழிற்சாலைகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நவ.1ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 5-ம் தேதி (நாளை) வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காற்று மாசு கட்டுக்குள் வராத நிலையில், நவம்பர் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கான விடுமுறையை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. மேலும், டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா மாவட்டம் மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ளஅனைத்து பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 லட்சம் சுவாச முகமூடிகளை மாணவர்களுக்கு டெல்லி அரசு வழங்கி வருகிறது. இதுகுறித்து, டெல்லியில் உள்ளமுன்னதாக, உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாய நிலத்தில் தடையை மீறி சருகளை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் புகை மூடிக்கிடக்கிறது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. புகை மூடிக் கிடப்பதால், 32 விமானங்கள் டெல்லியில் தரையிறங்க முடியாமல், வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x