Published : 01 Nov 2019 05:55 PM
Last Updated : 01 Nov 2019 05:55 PM

குட்டிக் கதை 9:  கெடுதல் செய்தவர்க்கும் நல்லதே செய்!

“நெல்மகன் வந்துட்டாரா ” என்று கேட்டான் விஜயன். யாரும் பதில் சொல்லவில்லை.

“அது யாரு நெல்மகன்?” என்று கேட்டவாறே வகுப்பிற்குள் நுழைந்தார் அறிவியல் ஆசிரியர்.

யாரும் எதுவும் பேசவில்லை.

அதற்கு மேல் ஆசிரியரும் எதுவும் கேட்காமல் பாடம் நடத்த தொடங்கினார்.

பாடவேளை முடிந்ததும் வெளியே சென்ற ஆசிரியரை வகுப்பு லீடரான முருகன் பின்தொடர்ந்து சென்றான்.

“சார், ஒரு நிமிஷம், நீங்க போன வாரம்தான் மாறுதலில் இந்தப் பள்ளிக்கு வந்தீர்கள், அதனாலதான் விஜயனைப் பற்றி உங்களுக்கு தெரியல சார், அவன் எல்லோரையும் கிண்டல் செய்து, பட்டப் பெயர் எல்லாம் வைப்பான் சார், ‘நெல்மகன்’ என்பது அவன் உங்களுக்கு வெச்ச பட்டப் பெயர், இந்த ஒரு வாரமாகவே நான் உங்களை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன் சார். நீங்க கோபமே படாம ரொம்ப அமைதியா இருக்கீங்க, அன்பாப் பேசறீங்க, அதான் சார் உங்க கிட்ட உண்மையை சொன்னேன்”

“ஓ! நெல்சன் என்ற என் பெயரைத்தான் நெல்மகன் என்று கிண்டலாக சொல்றானா?” (நெல்சன் – நெல் சன் – ஆங்கில உச்சரிப்பில் சன் என்பது மகன்தானே! )

“ஆமாம் சார், ‘முருகன்’ என்கிற என் பெயரைக் கூட ‘முருதுப்பாக்கி’ என்றுதான் கூப்பிடுவான் ” ( முருகன் – முரு கன் – ஆங்கில உச்சரிப்பில் கன் என்பது துப்பாக்கி)

“நல்லா தான் யோசிக்கறான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஆசிரியர்.

“என்ன சார், சிரிக்கறீங்க, இவ்ளோ கிண்டல் செய்யறானே, அவன் மேல உங்களுக்கு கோபமே வரலையா?”

“அவன் அப்படி நடக்கறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். அது சரி, அவன் படிப்பில எப்படி?”

“சுமாரா படிப்பான் சார், போன வருஷம் ஒன்பதாவது வகுப்புலதான் இங்க வந்து சேர்ந்தான். அதுவும் அவன் தாத்தா, பாட்டி வீட்ல இருந்துதான் வர்றான்”

“அப்படியா, அவன் பெற்றோர் எங்க இருக்காங்க?”

“அது யாருக்கும் தெரியாது சார், சேரும்போது கூட பாட்டி வீட்டு அட்ரஸ் தான் கொடுதிருக்காங்க சார்”

“சரி, நீ வகுப்புக்கு போ” என்று கூறினார் ஆசிரியர்.

அன்று மாலை ஆசிரியர் நெல்சன், விஜயனின் பாட்டி வீட்டுக்கு போனாராம். அடுத்த இரண்டு நாட்கள் நெல்சன் சார் பள்ளிக்கு வரவில்லை. யாருக்கும் எதுவும் புரியவில்லை.

“டேய் முருகா, அன்னைக்கு சார்கிட்ட போய் அப்படி என்ன தான் சொன்ன? மறுநாள் முதல் அவர் ஸ்கூலுக்கே வரல?”

“நான் எதுவும் சொல்லல டா, எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு, நெல்சன் சார் ரொம்ப நல்லவரு” என்றான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நெல்சன் சார் வந்து விட்டார். ஆனால் விஜயன் பள்ளிக்கு வரவில்லை. என்ன ஏது அன்று புரியாமல் எல்லோருக்கும் குழப்பத்தில் இருந்தனர்.

மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு விஜயன் வந்தான். வகுப்பறைக்குள் நெல்சன் சார் நுழைந்ததும் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

“போன வருஷம், கம்பெனியில ஆக்சிடெண்ட் ஆனதால என் அப்பாவுக்கு ஒரு கால் போயிடுச்சி சார். அந்த வருத்தத்த மறக்கறதுக்குத்தான் சார் நான் எல்லோரையும் கிண்டல் செய்தேன். உங்களைக் கூட கிண்டல் செய்தேன் சார். ஆனா, நீங்க என் மேல கோபப்படாம என் பாட்டிகிட்ட என் வீட்டு அட்ரெஸ் கேட்டு வாங்கி எங்க அப்பாவை போய்ப் பார்த்திங்க. அவருக்கு செயற்கைக் கால் வாங்கி தந்திருக்கீங்க சார். என்னை மன்னிச்சிடுங்க சார். கெடுதல் செய்யறவங்களுக்கும் நல்லதே செய்தீங்க சார். இனி நானும் யார் மனசும் புண்படாம நடந்துக்குவேன் சார்”

“ரொம்ப மகிழ்ச்சி விஜயன் “ என்றார் நெல்சன் சார்.

விஜயனின் மனமாற்றத்தை நினைத்து அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

நீதி: கெடுதல் செய்தவர்க்கும் நல்லதே செய்ய வேண்டும்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x