Published : 01 Nov 2019 08:10 AM
Last Updated : 01 Nov 2019 08:10 AM

பகலிரவு டெஸ்ட் ரசிகர்களை கவரும்: சச்சின் டெண்டுல்கர் கருத்து 

புதுடெல்லி

பகலிரவு டெஸ்ட் போட்டி ரசிகர்களை கவரும். அவர்களை மைதானத்துக்கு வரவழைக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்

வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா - வங்கதேசம் இடையே இம்மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வழக்கமாக காலையில் டெஸ்ட் போட்டியை தொடங்குவதற்கு பதிலாக மதியம் போட்டியைத் தொடங்கி இரவு வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்துக்கு பதிலாக பிங்க் நிற பந்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்திருப்பது நல்ல முயற்சிதான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலியின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இதன்மூலம் டெஸ்ட் போட்டி
யைக் காண கூடுதல் ரசிகர்களை மைதானத்துக்கு இழுக்க முடியும். ரசிகர்களும் தங்கள் வேலை நேரத்துக்குப் பிறகு டெஸ்ட் போட்டியை நிம்மதியாக ரசிக்கலாம்.

அதேநேரத்தில் போட்டியின்போது பனிப்பொழிவு அதிகம் இல்லாதிருக்க வேண்டும். அப்படி பனிப்பொழிவு இருந்தால், பந்து ஈரமாகி அதைக் கையாள்வது கடினமாக இருக்கும். இது வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

அதேநேரத்தில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்தால் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமையும். பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பிங்க் நிற பந்தை பயன்படுத்துவதுடன் புற்கள் நிறைந்த ஆடுகளமும் பயன்படுத்தப்பட உள்ளது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்என்றபோதிலும், சுழற்பந்து வீச்சாளர்களாலும் இதில் சாதிக்க முடியும். ஆடுகளத்தில் பந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நுணுக்கமான தகவல்களை பந்துவீச்சாளர்களுக்கு வழங்குவதில், விக்கெட் கீப்பர் சாஹா முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். இவ்வாறு சச்சின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x