Published : 01 Nov 2019 07:51 AM
Last Updated : 01 Nov 2019 07:51 AM

ஆங்கிலத்தில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை தாய்மொழியில் மொழிபெயர்க்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

நாக்பூர்

‘‘ஆங்கிலத்தில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை, அவரவர் தாய்மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். அப்போதுதான் ஆராய்ச்சிகள் மக்களை சென்றடையும்’’ என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் ஒன்று புதன்கிழமை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை ஆங்கிலத்தை மட்டும் வெளியிட்டால், அது அதிக மக்களை சென்றடையாது. ஆராய்ச்சி கட்டுரைகள் மக்களின் தாய்மொழியில் இருந்தால்தான் அதை பாராட்டுவார்கள். ஆங்கிலத்தை கற்றுக் கொள்வது தவறு இல்லை. ஆனால், அதற்கு முன்பாக தங்களின் தாய் மொழியை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.

தாய்மொழி கண் போன்றது. பிறமொழிகள் கண் கண்ணாடி போன்றது. இதுஉலகில் உள்ள அனைத்து நாட்டவா்க்கும் பொருந்தும். ஒவ்வொருவரும் அவரவா் தாய்மொழி குறித்து பெருமை பட வேண்டும். எல்லா மொழியையும் கற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு வகையான இந்திய மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் உள்ள நகரங்கள் காற்றுமற்றும் நீா் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வளமான, பாதுகாப்பான, சுகாதாரமான வருங்காலத்தை நம்மால் சிந்தித்துக்கூட பார்க்கமுடியாது. நகரங்களில் காற்று மிகவும் மாசுப்பட்டுள்ளதாக பல்வேறு முடிவுகள் தெரிவிக்கின்றன. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு 2019-ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், நமது நாட்டில்நிகழும் 12.5 சதவீதம் இறப்புகளுக்கு காற்று மாசுபாடே காரணம் என்று கூறுகிறது. இது உண்மையாகவே மிகப்பெரிய ஆபத்து. இந்த தகவல் மிகுந்த வேதனை தருகிறது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் சீரழிவு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக உள்ளது என உலக பொருளாதார மன்றம் மதிப்பிட்டுள்ளது. தேசியகாற்று தூய்மை திட்டம் (என்சிஏபி) என்றபுதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2024-ம் ஆண்டுக்குள், காற்றிலுள்ள நுண்துகள்களின் அளவை 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மனித வாழ்வை மேம்படுத்தவும், துன்பங்களைப் போக்கவும், நாட்டில் அமைதி,நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உதவி செய்ய வேண்டும். இயற்கையை நேசித்து, இயற்கையோடு வாழ்வோம்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x