Published : 31 Oct 2019 02:32 PM
Last Updated : 31 Oct 2019 02:32 PM

பாக். இந்து மாணவி மர்ம மரணம்; ஆடையில் ஆணின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு: புதிய திருப்பம்

லர்க்கானா

பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடல் மற்றும் ஆடைகளில் ஆணின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஷாஹீத் மொஹ்தார்மா பெனாசிர் பூட்டோ மருத்துவப் பல்கலைக்கழகத்தில், நிம்ரிதா என்ற மாணவி கடைசி ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, அவரின் அறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

கல்லூரி நிர்வாகம் அவரின் மரணத்தைத் தற்கொலை என்று கூறியது. ஆரம்பகட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகளும் அதை தற்கொலை என்றே குறிப்பிட்டன. எனினும் லர்க்கானா காவல்துறை, செப்.17-ம் தேதி நிம்ரிதாவின் டிஎன்ஏ மாதிரிகளை, தடயவியல் துறைக்கு அனுப்பியது. அறிக்கை முடிவில், நிம்ரிதாவின் உடல் மற்றும் ஆடைகளில் ஆணின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிம்ரிதாவின் சகோதரரும் மருத்துவருமான விஷால், இதைக் கொலை என்று குறிப்பிட்டார். விடுதியில் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், "இந்தக் கொலை வழக்கு குறித்து நியாயமான விசாரணை வேண்டும்" என்று கோரியிருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை முடுக்கினர்.

தீவிர விசாரணையை அடுத்து நிம்ரிதாவின் வகுப்புத் தோழர்கள் இருவரைக் காவல்துறை கைது செய்தது. அதில் மெஹ்ரான் அப்ரோ, நிம்ரிதாவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

விசாரணையின் அடிப்படையில் நிம்ரிதா, மெஹ்ரானைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் அதற்கு மெஹ்ரான் தயாராக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் 32 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதுகுறித்துப் பேசிய லர்க்கானா எஸ்எஸ்பி மசூத் பங்கஸ், ''நிம்ரிதாவின் டிஎன்ஏ அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. இதை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்'' என்றார்.

சிக்கலான இந்தக் கொலை வழக்கில் புதிய தடயங்கள் ஏதாவது புலப்படும் எனக் கருதி சாந்தினியின் மடிக்கணினியும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை கூறியுள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x