Published : 31 Oct 2019 10:42 AM
Last Updated : 31 Oct 2019 10:42 AM

வண்ணத் தூரிகையில் வர்ண ஜாலங்கள்: ஓவியம் தீட்டுவதில் சாதிக்கும் மாணவி கிருத்திகா

த.சத்தியசீலன்

கோவை

கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் எஸ்.கிருத்திகா. சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் வல்லவரானஇவர், தற்போது மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதித்து வருகிறார். கோவையில் மத்திய மனித வள அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ், கடந்த வாரம் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ‘கலா உத்சவ்' ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட இவர், அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மையமாக வைத்து வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசு பெற்றது.

இதற்கு முன் கடந்த ஆண்டு பள்ளிகல்வித்துறை சார்பில் நடைபெற்ற, கலைஅருவி போட்டியில் வண்ணக்கோலம் மற்றும் பானை ஓவியப் போட்டிகளில் முறையே முதல் பரிசு பெற்றார். அதைத்தொடர்ந்து தனியார் எஃப்.எம். நிறுவனம்கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்குஇடையே நடத்திய பிரமாண்ட ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். 2017-2018-ம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில், ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து முறையே ரூ.1,500, ரூ.4,500 என கல்வித்துறையின் ரொக்கப்பரிசு பெற்றார். ஓவியம் வரைதல் மட்டுமின்றி, படிப்பிலும் படுசுட்டி கிருத்திகா. தனது ஓவிய அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

சிறு வயது முதலே ஓவியம் வரைவதில்எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. நேரம்கிடைக்கும் போதெல்லாம் ஓவியங்கள் வரைந்தேன். ஆரம்பத்தில் மற்ற ஓவியங்களை பார்த்து வரைந்து வந்த நான், நாளடைவில் எனது கற்பனையில் தோன்றியவற்றை ஓவியமாக தீட்டத் தொடங்கினேன்.

அதுவரை மனம் விரும்பிய வகையில்ஓவியம் வரைந்து வந்த எனக்கு, 6-ம்வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளியின் ஓவிய ஆசிரியை ஆர்.ராஜலட்சுமி, முறையாக ஓவியம் வரைவதற்குக் கற்றுக்கொடுத்தார். அதன் பின்னர் ஓவிய ஆசிரியை எஸ்.கௌசல்யா ஓவியம் வரைவதற்கு பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியானது ஓவியம் தீட்டுவதைமேலும் எளிதாக்கியது. துல்லியமாக ஓவியம் வரைவதற்கான யுக்திகளைக் கற்றுக் கொண்டேன். அதன்பின்னர் என்னுடைய ஓவியங்கள் மெருகேறின. குழந்தைகள் பாதுகாப்பு, புவியைபாதுகாப்போம், அழிந்து வரும் கலைகள்ஆகிய தலைப்புகளில் நான் வரைந்த ஓவியங்கள் மிகவும் பாராட்டப்பட்டன.

ஓவியம் வரைவது எனக்கு மிகுந்தமகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் சிறப்பாக ஓவியங்கள் வரைந்து, அதிக பரிசுகள் பெற வேண்டும். அதற்காக தொடர் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தலைமை ஆசிரியர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்னை ஊக்குவித்து வருகிறார். பெற்றோர் எஸ்.சக்திவேல்-பி.அமுதா ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்” என்றார், மாணவி எஸ்.கிருத்திகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x