Published : 31 Oct 2019 09:50 AM
Last Updated : 31 Oct 2019 09:50 AM

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான இன்று இந்தியாவின் யூனியன் பிரதேசமானது காஷ்மீர்: துணை நிலை ஆளுநர் நள்ளிரவு பொறுப்பேற்கிறார்

புதுடெல்லி

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தன. இந்த 2 யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

கடந்த 1947 முதல் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, இந்தியாவுடன் தனது புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது.

ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த மகாராஜா ஹரி சிங், 1947-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி இந்திய யூனியனின் ஒரு பகுதியாக, தனது ஆட்சி பகுதியை இணைத்தார். இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு ஏராளமான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு திரும்ப பெற்றது.

இதனைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் ஒரே மாநிலமாகவும், புத்த மதத்தினர் அதிகம் வசிக்கும் லடாக் பகுதி தனியாகவும் பிரிக்கப்பட்டன. இதில் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீரும் (புதுச்சேரி போல்) சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் (சண்டிகர் போல்) செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அவை படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், 72 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் லேண்ட்லைன் சேவையும், செல்போன் சேவையும் மீண்டும் கொடுக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில் பள்ளித் தேர்வுகள் நேற்று தொடங்கின.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 எம்.பி.க்கள் கடந்த 2 நாட்களாக நேரில் ஆய்வு செய்த பிறகு டெல்லி திரும்பினர். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாங்களும் துணையாக இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதால், இனி அந்த மாநிலத்துக்கென தனி கொடி இருக்காது. அதேபோல், இந்திய ஆட்சி பணியான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் அங்கு நியமிக்கப்படுவார்கள். பிரிக்கப்படாத ஜம்மு-காஷ்மீரின் கடைசி முதல்வராக மெஹபூபா இருந்தார். சத்யபால் மாலிக் கடைசி ஆளுநராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் நேற்று முடிவடைந்ததால், அவர் கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெற்று கிட்டதட்ட 90 நாட்களுக்குப் பின்னர், யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் தனது புதிய அத்தியாயத்தை இன்று முதல் தொடங்குகின்றன. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019-ன்படி, 2 யூனியன் பிரதேசங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பொறுப்பாளர்கள் அக்டோபர் 31-ம் தேதி (இன்று) நள்ளிரவு பதவியேற்கவுள்ளனர்.
மேலும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கிரிஷ் சந்திர முர்மு மற்றும் ராதாகிருஷ்ண மாத்தூர் ஆகியோர் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களின் புதிய துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நகர் மற்றும் லே பகுதியில் தனது பணியை இன்று முதல் தொடங்கவுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பிற மத்திய சேவை அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் (ஏ.சி.பி) ஆகியவை ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முர்மு மற்றும் மாத்தூர் ஆகியோர் இன்று பதவியேற்பார்கள்.

இந்தியாவில் 560-க்கும் அதிகமான சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்த பெருமை நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலை சேரும். அவருடைய பிறந்த நாள் இன்று (அக்.31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளான இன்று முதல் புதிதாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வாக இந்தியாவுடன் இணைந்து, இந்திய சட்டத்திட்டங்களுடன் நடைமுறைக்கு வந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x