Published : 31 Oct 2019 08:18 AM
Last Updated : 31 Oct 2019 08:18 AM

7 மாதங்களில் 14 மலைகளை ஏறி நேபாளத்தை சேர்ந்தவர் உலக சாதனை

காத்மாண்டு

நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்பவர், 7 மாதங்களில் 14 மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்த சிகரத்தின் உச்சிக்கு சென்று தங்கள் பெயரை பொறிக்க, பல நாடுகளை சேர்ந்த மலையேறும் வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களில் பலர் வெற்றியும் கண்டுள்ளனர்.

ஆனால், மலையேற வேண்டும் என்ற ஆர்வம், தற்போது விரைவில் யார் மலையேறுகிறார்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதன்படி, உலகில் மிக உயரமான 14 மலைகளை 7 மாதங்களில் ஏறி தான் சாதனை செய்துள்ளதாக நேபாளத்தைச் சேர்ந்த 36 வயதான நிர்மல் புர்ஜா தனது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ‘MISSION ACHIEVED’ என பகிர்ந்துள்ளார். 8,000மீட்டர் (26,250 அடி) உயரமுள்ள மலையை ஏற, கடந்த ஏப்ரல் மாதம் தனது பயணத்தை எவரெஸ்ட் மலைத் தொடரில் உள்ள அன்னபூர்ணா மலையில் இருந்து தொடங்கினார்.

அதன்பின்னர், பாகிஸ்தானில் உள்ள 5 மலைத்தொடர்களை ஏறியுள்ளார். இறுதியாக, நேபாளத்தில் உள்ள சோ ஓயு மற்றும் மனஸ்லு மலைகளை ஏறி, தனது பயணத்தை வெற்றியுடன் இந்த வாரம் முடித்துக் கொண்டார்.

முன்னதாக, 1987-ம் ஆண்டு போலந்தை சேர்ந்த மலையேற்ற வீரர் ஜெர்சி குகுஸ்கா 7 ஆண்டுகள், 11 மாதம் 14 நாட்களில் இந்த சாதனையை செய்தார். தற்போது அந்த சாதனையை நிர்மல் முறியடித்துள்ளார்.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை

இதுகுறித்து, நிர்மல் கூறுகையில், “ஏழு மாதங்களில் மலை ஏறப்போகிறேன் என்று நான் கூறியதும் இது எப்படி சாத்தியம் என அனைவரும் சிரித்தார்கள். அதற்கு நான், ‘இது எனது திறனை நம்புவதை சார்ந்தது என்று கூறினேன். எனது சாதனை அடுத்த தலைமுறையினருக்கு மலையேறுதல் மீது ஆர்வத்தை உருவாக்கும். நேபாளம் உலகின் மிக உயர்ந்த சிகரங்களின் தாயகமாக உள்ளது. அங்கு திறமையான பல மலையேற்ற வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x