Published : 30 Oct 2019 08:13 AM
Last Updated : 30 Oct 2019 08:13 AM

விளையாட்டை தெரிந்துகொள்ளுங்கள்- பார்முலா 1 கார் பந்தயம்

பி.எம்.சுதிர்

சென்னை

பார்முலா 1 கார் பந்தயம் என்பது ஒரு இருக்கையை மட்டுமே கொண்ட கார்களுக்கான மிகப்பெரிய பந்தயமாகும். சர்வதேச வாகன கூட்டமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ள இப்பந்தயம், பார்முலாஒன் குழுமத்தால் நடத்தப்படுகிறது. 1950-ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வரும் பார்முலா 1 பந்தயம், கார் பந்தய வரலாற்றிலேயே மிகவும் பழமையான பந்தயமாகும்.

பார்முலா 1 பந்தயம் கிராண்ட் ப்ரிக்ஸ் என்ற பெயரில் ஆண்டுமுழுவதும் உலகின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. ‘‘இதில் ஒவ்வொரு கிராண்ட் ப்ரிக்ஸ் பந்தயத்திலும் வெற்றி பெறுபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். அந்தந்த ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்தமாக கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு கிராண்ட் ப்ரிக்ஸ் பந்தயமும் பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு நடக்கும். இதில் வெள்ளிக்கிழமைகளில் 2 பயிற்சி சுற்றுகளும், சனிக்கிழமைகளில் தகுதிச்சுற்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் இறுதிச் சுற்றும் நடைபெறும். இந்த பந்தயங்களின்போது இன்ஜின்கள் கடும் வெப்பத்தை வெளியிடுவதால், ஒவ்வொரு போட்டியின் இறுதியிலும் பந்தய வீரர்கள் 4 கிலோ எடை வரை இழப்பார்கள். போட்டிக்கு பிறகு நீர்ச்சத்துமிகுந்த உணவுகளைச் சாப்பிட்டும், அதிக அளவில் நீரைப் பருகியும், வீரர்கள்அந்த எடையை மீண்டும் பெறுவார்கள்.

மேலும் போட்டியின்போது வீரர்கள் 3 லிட்டர் தண்ணீர் வரை தங்களின் உடலில் இருந்து இழப்பார்கள் என்பதால், போட்டிக்கு முன் வீரர்கள் நிறைய தண்ணீரைக் குடிப்பார்கள். இதுதவிர வீரர்கள் அமரும் காக்பிட்டுக்கு உள்ளேயும் தண்ணீர் பாட்டில்
பொருத்தப்பட்டிருக்கும். தேவைப்படும் போது வீரர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக அதிலிருந்து ஒரு டியூப் வெளியில் பொருத்தப்பட்டிருக்கும்.

பார்முலா 1 பந்தயங்களுக்கென்றே விசேஷமான சேஸிஸ், கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட கார்கள் தயாரிக்கப்படுகின்றன. சக்திமிக்க இன்ஜினைக் கொண்ட இந்த கார்கள் மிகவும் விலை மதிப்பு மிக்கவை. ஒரு காரின் சராசரி விலை 10.5 மில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது சுமார் ரூ. 70 கோடி) ஆகும்.

பார்முலா 1 பந்தயங்களில் ஆண்டுதோறும் 2 வகையான சாம்பியன்ஷிப்கள் வழங்கப்படும். இதில் ஒரு சாம்பியன்ஷிப் மிகச்சிறந்த பந்தய வீரருக்கும், மற்றொரு சாம்பியன்ஷிப் மிகச்சிறந்த வாகன உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படும். பார்முலா 1 பந்தயத்துக்கான தூரம் பெரும்பாலும் 300 கிலோ மீட்டராக இருக்கும். மொனாக்கோவில் நடக்கும் கிராண்ட் ப்ரிக்ஸ் பந்தயத்தில் மட்டும் இந்த தூரம் 260 கிலோமீட்டராக உள்ளது. பந்தயத்தில் கலந்துகொள்பவர்கள் குறைந்தபட்சம் 90 நிமிடம் முதல் அதிகபட்சமாக 2 மணிநேரத்துக்குள் பந்தய தூரத்தை கடந்து விடுவதுண்டு.

பார்முலா 1 பந்தயங்களில் மிகச்சிறந்த வீரராக மைக்கேல் ஷூமேக்கர் கருதப்படுகிறார். இவர் 7 முறை பார்முலா 1 சாம்பியன்ஷிப்பில் பட்டத்தை வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x