Published : 25 Oct 2019 08:31 AM
Last Updated : 25 Oct 2019 08:31 AM

பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா கரன்சியால் தீவிரவாத அமைப்புகள் எளிதில் நிதியுதவி பெறும் ஜி-7 நாடுகள் எச்சரிக்கை

வாஷிங்டன்:

லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோ கரென்சி (டிஜிட்டல் பணம்) ஒன்றை 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளோம் என்று பேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது.

இதற்கு, குரூப் ஆப் செவன் ( ஜி7)எனப்படும் 7 நாடுகள் கடும் எதிர்ப்புதெரிவித்தன. மேலும், லிப்ரா கரன்சியை அனுமதிக்க முடியாது என்று 7 நாடுகளும் அறிவித்துள்ளன. பேஸ்புக் என்பது ஒரு பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.

ஆனால், அதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது பணப்பரிமாற்றம் செய்ய உதவும் வலைதளமாக பேஸ்புக் மாறவுள்ளது. அதற்கான வேலைகளை பேஸ்புக் நிறுவனம் வேகமாக செய்து வருகிறது. இதற்காக, லிப்ரா என்ற டிஜிட்டல் பணத்தை பேஸ்புக் உருவாக்கி வருகிறது. இதன்மூலம், இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றங்களை பேஸ்புக் வழியாகவே செய்யலாம்.

அதேபோல், லிப்ரா கரன்சியை சேமித்து வைக்க, ‘கலிப்ரா’ என்ற பெயரில் டிஜிட்டல் வாலெட்டையும் (பணப்பை)பேஸ்புக் உருவாக்கி வருகிறது. இந்நிலையில், லிப்ரா கரன்சி மூலம் தீவிரவாத இயக்கம் எளிதில் நிதியைபெரும் என்று ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. (Group of Seven). இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. லிப்ரா கரன்சியில் பலசிக்கல்கள் உள்ளன. அவற்றை களையும் வரை அதை வெளியிடக் கூடாதுஎன்று ஜி7 கூறியுள்ளது.இதுகுறித்துபிரான்ஸ் நிதி அமைச்சர் பிர்னோலி மேரிடம் சில பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:இது சாதாரண பொருளாதார கேள்வி இல்லை. இது ஜனநாயகத்தை பற்றிய விஷயமாகும். பேஸ்புக்கில் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளதால் லிப்ரா கரன்சி உலகம் முழுவதும் விரைவில் சென்றுவிடும். ஆனால், லிப்ரா கரன்சியில் பல பொருளாதார சிக்கலும், அதை அமல்படுத்துவதில் பல இடர்பாடுகளும் உள்ளன. இதன்மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு எளிதில் நிதி பெற வழிவகை ஏற்படும். ஒரு தனியார் நிறுவனம், ஜனநாயக அரசுக்கு இணையாக வலிமையை பெற எந்த மக்களும் விரும்பமாட்டார்கள்.

இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இது பிட்காயின் போல் இருக்காது.(பிட்காயினும் ஒருவகை இணைய கரன்சிதான்) லிப்ரா கரன்சி மூலம் இருப்பு சொத்துக்களை அதிகப்படுத்த முடியும். மேலும், பணப் பரிவர்த்தனையை கணக்கிட முடியாமலும் போகலாம். இதனால், நாட்டில் நிலையற்ற பொருளாதாரம் மந்தநிலையும் பணவீக்கமும் ஏற்படும். எனவே, இதுபோன்ற அபாயங்களைக் கையாள சரியான விதிமுறைகளை பேஸ்புக் நிறுவனம் அமைக்கவேண்டும். அதுவரை பேஸ்புக் தனது லிப்ராவை தொடங்கக் கூடாது என்று ஜி7 கருதுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா திட்டத் தலைவர் டேவிட் மார்கஸ் கூறுகையில், “மேரினின் கவலை நியாயமானதுதான். ஆனால், அவரின் கவலையை போக்கும் விதத்திலும், சரியான தீர்வாகவும் லிப்ராவை அமல்படுத்துவோம்” என்றார்.

இதற்கிடையில், ஜெனிவாவில் லிப்ரா அமைப்பை கடந்த திங்களன்று (14ம் தேதி) பேஸ்புக் நிறுவனர் மார்க் தொடங்கி வைத்தார். சீனாவும், தங்கள் நாட்டுக்கென தனி இணையதள கரன்சியை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x