Published : 25 Oct 2019 08:13 AM
Last Updated : 25 Oct 2019 08:13 AM

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி

சென்னை

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை ரூ.24,375 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில், தமிழகத்தில் திருப்பூர்,நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழகம் சார்பில் கோரப்பட்டது. இதற்காக கடந்த மாதம் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் செயலாளர் ப்ரீதா சுதான் ஆகியோரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நடைபெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலனை செய்த மத்திய அரசு, நாடுமுழுவதும் அமையவுள்ள 31 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தில் 6 கல்லூரிகளை அமைக்க முடிவு செய்தது. இதற்கான அனுமதிக் கடிதத்தை தமிழக சுகாதாரத் துறைக்குநேற்று முன்தினம் மத்திய சுகாதாரத் துறை அனுப்பியது. இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளன.

இதில், 60 சதவீதத் தொகையான ரூ.195 கோடியை மத்திய அரசும் மீதமுள்ள 40 சதவீதத் தொகையான ரூ.130 கோடியை மாநில அரசும் ஏற்கவுள்ளன.

தமிழகத்தில் தற்போது 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,500-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. புதிதாக அமையவுள்ள கல்லூரிகளில் தலா 150 இடங்கள் கிடைக்கவுள்ளன. இதன்மூலம், அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசு முதல்கட்டமாக அறிவித்த 58 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 39 கல்லூரிகள் ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மீதமுள்ள 19 கல்லூரிகள் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளன. அடுத்தகட்டமாக அறிவிக்கப்பட்ட 24 கல்லூரிகளில் 18 கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் ஒரு கல்லூரி கூட தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் மூன்றாம் கட்ட அறிவிப்பில்6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இவைதவிர திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்மருத்துவ கல்லூரி தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் மற்றும்நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்தியஅரசின் அனுமதியும் நிதியுதவியும் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். எனது கோரிக்கையினை ஏற்று 6 கல்லூரிகள் அமைக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று நிகழ்வு. இதற்கென ரூ.1,950 கோடி மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கி, அதில் ரூ.1,170 கோடி வழங்கமத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது.

தமிழக அரசின் பங்காக ரூ.780 கோடி வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்தச் சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி,திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 12 இடங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x