Published : 24 Oct 2019 11:27 AM
Last Updated : 24 Oct 2019 11:27 AM

ரேடாரில் பொருத்தக் கூடிய சமதள பரப்பியை உருவாக்கிய என்ஐடி ஆராய்ச்சி மாணவருக்கு ரூ.5 லட்சம் பரிசு: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்

திருச்சி

எதிரே வரும் விமானங்களை துல்லியமாக கண்டறியும் வகையில், ரேடாரில் பொருத்தக் கூடிய சமதள பரப்பில் என்னும் கருவியை உருவாக்கிய திருச்சி என்ஐடி ஆராய்ச்சி மாணவர்கே.கிருஷ்ணகாந்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.5 லட்சம் பரிசு வழங்கி பாராட்டினார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) ‘கனவு காண தைரியம் வேண்டும்’ என்ற தலைப்பில் தொழில்முறை திறன் போட்டியை அண்மையில் நடத்தியது. இதில், திருச்சி என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பேராசிரியர் ராகவன் வழிகாட்டுதலில் ஆராய்ச்சி படிப்பை (பிஎச்டி) மேற்கொண்டு வரும் கே.கிருஷ்ணகாந்த் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றார். இவர், ரேடாரில் உள்ள ரேடோம் சாதனத்தில் பொருத்தக்கூடிய சமதள பரப்பி என்ற கருவியை உருவாக்கியுள்ளார். போர் விமானத்தின் முனையில் இந்தக் கருவியைப் பொருத்தினால், எதிரே வேறு விமானம் எந்த திசையில் உள்ளது, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். இந்தக் கருவி இந்திய ராணுவத்துக்குப் பயன்படும் வகையில் உள்ளது.

ரேடாரில் பொருத்தக் கூடிய சமதள பரப்பியை உருவாக்கிய ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணகாந்துக்கு டெல்லியில் அக்.15-ம் தேதி நடைபெற்ற டெல்லி டிஆர்டிஓ இயக்குநர்கள் கருத்தரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார். 3,000 பேரில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகாந்தை என்ஐடி இயக்குநர் மினிஷாஜி தாமஸ், வழிகாட்டி பேராசிரியர் ராகவன் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர். தான் உருவாக்கிய கருவியின் 3 மாடல்களை அனுப்பி, அதற்கான காப்புரிமைக்கு கிருஷ்ணகாந்த் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பான் நாட்டின் கயோட்டா நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் நுண்ணலை சர்வதேச பொறியியல் கருத்தரங்கில் இந்தியாவிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த 11 ஆராய்ச்சி மாணவர்களில் கிருஷ்ண
காந்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆராய்ச்சி கட்டுரையானது, ராணுவ ரேடாரின் நுண்ணலைதத்துவங்கள் தொடர்பாக அமைந்திருந்தது.

கிருஷ்ணகாந்தின் சாதனை குறித்து அவரது ஆராய்ச்சி வழிகாட்டி பேராசிரியரான ராகவன் கூறும்போது, ``சாதாரண தச்சுத்தொழிலாளியின் மகனான கிருஷ்ணகாந்த், கடினஉழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்க்கையின் உச்சத்தை
அடைய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். தேசிய அளவில் கடுமையான தேர்வுகளுக்கு பின்னரே அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட தனது 3 கண்டுபிடிப்புகளுக்கு கிருஷ்ணகாந்த் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x