Published : 24 Oct 2019 08:31 AM
Last Updated : 24 Oct 2019 08:31 AM

கண்ணிவெடி தாக்குதலில் கால்களை இழந்தவர் சர்வதேச விளையாட்டில் தங்கங்களைக் குவிக்கிறார்

பி.எம்.சுதிர்

திடீரென்று ஏற்படும் விபத்தில் ஒருவருக்கு கால் துண்டாகிவிட்டால் என்ன நடக்கும்?... சாதாரண மனிதராக இருந்தால் வாழ்க்கையே தொலைந்துவிட்டது போன்ற மனநிலைக்கு வந்துவிடுவார். ஆனால் ராணுவ வீரரான ‘லேன்ஸ் நாயக்’ ஆனந்தன் குணசேகரன் சாதாரண மனிதர் அல்ல. சோதனைகளை சாதனைகளாக்கத் தெரிந்தவர். அதனால்தான் விதியுடன் போராடி மீண்டெழுந்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் நேற்று முன்தினம் நடந்த உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தில் 53.35 விநாடிகளிலும் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தின் கும்பகோணத்தில் 1987-ம் ஆண்டு பிறந்தவர் ஆனந்தன் குணசேகரன். சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வமாக இருந்த அவர், பள்ளி அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டைப் போலவே நாட்டையும் நேசித்த அவர் படிப்பை முடித்ததும் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில், இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது நடந்த கண்ணிவெடி தாக்குதலில் அவருடைய ஒரு கால் துண்டானது.

கால் துண்டான நிலையிலும் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட சோதனையை சாதனையாக மாற்ற முடிவெடுத்தார். அவருக்கு உதவியாக இந்திய ராணுவம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள செயற்கை காலை வழங்கியது. இதைத்தொடர்ந்து பாரலிம்பிக் வீரராக மாறிய இவர், செயற்கைக் காலுடன் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.

இதுபற்றி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “சிறுவயதில் இருந்தே எனக்கு ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் அதிகம். விபத்தில் ஒரு காலை இழந்ததும், முதலில் என் வாழ்க்கையே பறிபோய்விட்டதாக நினைத்தேன். ஆனால் சில நாட்களுக்கு பிறகு இதை வெற்றிகொள்ளும் ஆர்வம் எழுந்தது. எனக்கு விருப்பமான விளையாட்டின் மூலம் வாழ்க்கையில் மீண்டும் வெல்ல உறுதிகொண்டேன். இதைத்தொடர்ந்து செயற்கை கால் உதவியுடன் ஓடுவதற்கு பயிற்சி பெற்றேன்” என்கிறார்.

2 கால்களும் இல்லாத நிலையிலும் சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் பிஸ்டோரியசை தனது ரோல் மாடலாக கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஆனந்தன் குணசேகரன்.

அப்படி பயிற்சி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. பயிற்சியின்போது பல முறை செயற்கைக் கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதனால் துண்டான கால் வீங்கி உள்ளது. கடும் வலி ஏற்பட்டுள்ளது. எழுந்து நடக்கவே சிரமப்பட்டுள்ளார். முதல் முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிக்கு சென்றபோது, இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

இப்படி பல இல்லைகளைக் கடந்து வாழ்க்கையில் போராடியுள்ளார் ஆனந்தன் குணசேகரன். அவரது மனைவியான தனலட்சுமியும் கணவரின் முயற்சிகளுக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த போராட்டங்கள் தான் இன்று புகழின் உச்சிக்கு அவரை கொண்டுசென்றுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் பலவற்றில் பதக்கங்களை வென்றுள்ள ஆனந்தன் குணசேகரனின் அடுத்த லட்சியம் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதுதான். இதற்காக அவர் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

‘‘எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். கால்களை இழந்த பிறகுவாழ்க்கையில் அதிகம் பயணம் செய்ய முடியாதோ என்று பயந்தேன். ஆனால் இன்று ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க பல நாடுகளுக்கு சென்றுவிட்டேன்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆனந்தன் குணசேகரன்.

ஆகவே மாணவர்களே, வாழ்க்கையில் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு ஆனந்தன் குணசேகரனின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கட்டும். எந்த கட்டத்திலும் நம்பிக்கையை கைவிடாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x