Published : 24 Oct 2019 07:55 AM
Last Updated : 24 Oct 2019 07:55 AM

அமெரிக்க நூலகத்தில் இருந்த பிந்தரன்வாலா படம், கொடி அகற்றம்

நியூயார்க்

அமெரிக்க நூலகத்தில் இருந்து சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலாவின் உருவப்படம் மற்றும் கொடி தற்போது அகற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலா. இவர், தம்தம்மி தக்சல் என்ற சீக்கிய அமைப்பை உருவாக்கினார். இந்தியாவில் இருந்து பஞ்சாப் தனி நாடாக பிரிக்கவேண்டும் என்று கோரி காலிஸ்தான் இயக்கத்தைத் தொடங்கி 1980-களில் இவர் ஆயுதம் ஏந்தி போராடினார்.

இந்த தனிநாடு கோரிக்கையை ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ மூலம், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முறியடித்தார்.

தம்தம்மி தக்சல் அமைப்பினருக்கும் இந்திய ராணுவத்துக்கும் பொற்கோயிலில் 1984-ம் ஆண்டு நடந்த போரில் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். பிந்தரன்வாலாவின் நினைவாக உருவப்படம், அவரது அமைப்பின் கொடி ஆகியவை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஓடிஸ் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிந்தரன் வாலாவின் படம் உள்ளதாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் செய்து வந்தனர்.

இந்நிலையில், பிந்தரன்வாலாவின் உருப்படம் மற்றும் அமைப்பின் கொடி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இதற்கு, “சமூகத்திற்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் இருந்த படத்தை அனுமதிக்காமல், புத்திசாலித்தனமான முடிவை எடுத்த நூலகத்தை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன் சமூகத்தின் ஒற்றுமை நிலவுவதை நூலகம் உறுதி செய்துள்ளது” என்று இந்தியாவின் தூதரக அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். நூலகத்தின் இந்த செயலுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.

நியூயார்க் நகரில் உள்ள தொழில் செய்து வரும் ஸ்வரன்ஜித் சிங் கல்சா என்பவர்தான் நூலகத்துக்கு நன்கொடையாக படத்தை வழங்கினார். பிந்தரன் வாலாவின் படம் ஒரு வாரத்துக்கு முன்பாக அகற்றப்பட்டுவிட்டது என்று நூலக நிர்வாகத்தினர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x