Published : 23 Oct 2019 03:25 PM
Last Updated : 23 Oct 2019 03:25 PM

குட்டிக் கதை 3: மூத்தோர் சொல் அமிழ்தம்

ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ரெண்டு பசங்க. பெரிய பொண்ணு பரிமளா, ஒன்பதாவது படிக்கறா. சின்னக் குட்டி வேலன் ஆறாம் வகுப்பு. பரிமளா எப்பவும் எல்லா விஷயத்திலும் சரியா நடந்துக்குவா. லீவ் போடாம பள்ளிக்கூடம் போய்ட்டு வருவா.

நம்ம சின்னவன் வேலன் இருக்கானே, அவனும் நல்ல பையன்தான். ஆனா பள்ளிக்கூடத்துக்கு போகாம அடிக்கடி லீவ் போட்டுட்டு எங்கயாவது ஊர் சுத்தப் போய்டுவான்.

அன்னைக்கும் அப்படித்தான். பள்ளிக்கூடம் போகாம வெளிய சுத்தப் போயிட்டான். அப்படியே ஆடிக்கிட்டே ஒரு தோப்புக்குள்ள போறான்.

அப்ப எதிர்ல ஒரு பெரியவர் வர்றார். “என்னப்பா, பள்ளிக்கூடம் போகாம தோப்புக்குள்ள ஏன் போற?”

“அதை கேக்க நீங்க யாரு? நான் எப்படியாவது போறேன். உங்களுக்கு என்ன?”

“அதுக்கில்லப்பா, தோப்புக்குள்ள நிறைய பள்ளம் எல்லாம் இருக்கும். அது தெரியாம விழுந்துட்டா உதவி செய்யக்கூட யாரும் வர மாட்டாங்க. தோப்புல ஆள் நடமாட்டம் குறைவா இருக்கும். அதுக்காகச் சொன்னேன்”

“எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க”

“இதுக்கு மேல நான் என்ன சொல்றது. சரி, பார்த்து பத்திரமா போ”

வேலன் குதித்துக்கொண்டே தோப்புக்குள் சென்றான். அங்கே இருந்த ஒரு மரப் பொந்திற்குள் ஏதோ மினுமினு என்று ஜொலித்தது. என்ன என்று பார்ப்பதற்காக அந்த மரப் பொந்திற்குள் கையை விட்டான் வேலன்.

“ஆ! அய்யோ ! “ என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தான். வேலனை பொந்துல இருந்த ஏதோ ஒரு பூச்சி கடிச்சிடுச்சி. அதான் வலி தாங்காம கத்திக்கிட்டே கீழ விழுந்திட்டான்.

“யாராவது இருக்கீங்களா? கொஞ்சம் இங்க வந்து பாருங்க. எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கே. இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலியே” என்று அழுதான்.

அந்தப் பெரியவர் சொன்னதுபோல தோப்புல யாரும் இருக்கற மாதிரியே தெரியல. ஏதாவது பிரச்சினை வந்தால் உதவிக்கு யாரும் வர மாட்டாங்கன்னு பெரியவர் சொன்னது அப்போதான் நம்ம வேலனுக்கு ஞாபகம் வந்தது.

‘அய்யோ! அப்பவே அந்தப் பெரியவர் சொன்னாரே, அது மாதிரியே ஆயிடுச்சே, இப்போ என்ன செய்றதுன்னு தெர்லையே’ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கும்போதே வேலனுக்கு மயக்கம் வர்ற மாதிரி ஆயிடுச்சி.

“என்னப்பா,என்ன ஆச்சு?” என்ற குரல் கேட்டு கஷ்டப்பட்டு கண் விழித்தான் வேலன்.

முதலில் வந்த பெரியவர்தான் எதிரில் நின்று கொண்டு இருந்தார். “தாத்தா, என்னை மன்னிச்சிடுங்க, நீங்க சொன்னதைக் கேட்காம போயிட்டேன்”

“அதெல்லாம் இருக்கட்டும், இப்போ என்ன ஆச்சு? அத மொதல்ல சொல்லு”

“இந்த மரப் பொந்துல கையை விட்டேன். என்னவோ கடிச்சிடுச்சி”

“சரி, வா, பக்கத்தில எனக்கு தெரிஞ்ச வைத்தியர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட போகலாம்” என்று சொல்லி கைத்தாங்கலாகக் கூட்டிக்கிட்டுப் போனார்.

மருத்துவர் பச்சிலை மருந்து அரைத்து, கடிபட்ட இடத்தில் கட்டு போட்டார். உள்ளுக்கு சாப்பிடவும் ஒரு மருந்து கொடுத்தார்.

சற்று நேரத்தில் வேலன் தெளிவாகக் காணப்பட்டான்.

“ரொம்ப நன்றி தாத்தா, சரியான நேரத்திற்கு வந்து என்னைக் காப்பாத்துனீங்க. அது சரி, வெளிய போன நீங்க மறுபடி எப்படி தோப்புக்குள் வந்தீங்க?”

“நீ சின்னப் பையனாச்சே, ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்ணுவ? அதனாலதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். நான் நினைச்ச மாதிரியே நடந்து போச்சு.”

நீங்க மொதல்ல சொல்லும்போதே கேட்ருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. இனி நான் எப்பவும் பெரியவங்க சொல்றதை கேட்டு நடப்பேன்.

நீதி : பெரியவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதன்படி நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x