Published : 22 Oct 2019 06:09 PM
Last Updated : 22 Oct 2019 06:09 PM

தேர்வுக்கு இன்னும் தயாராகவில்லை: பாடத்திட்டத்தைக் குறைக்க காஷ்மீர் மாணவர்கள் வேண்டுகோள்

ஸ்ரீநகர்

தேர்வுக்கு இன்னும் தயாராகவில்லை என்று காஷ்மீரில் உள்ள மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் படி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, அண்மையில் நீக்கப்பட்டது. மாநில அந்தஸ்தும் மாற்றப்பட்டு, யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். டெலிபோன், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது இயல்பு நிலை முழுமையாகத் திரும்பிவிட்ட நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 98 சதவீதப் பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. ஜம்முவில் 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பிவிட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 20.13 சதவீத மாணவர்கள் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளனர்.

பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிக்கும் விதமாக 5 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாணவர்கள் கூறும்போது, ''ஆகஸ்ட் 5-ம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், பாதிக்கும் மேற்பட்ட பாடத்திட்டம் இன்னும் முடிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது எங்களால் எப்படித் தேர்வெழுத முடியும்?

காஷ்மீரில் நிலவி வந்த கட்டுப்பாடுகள் காரணமாக தனியார் பயிற்சி மையத்துக்குச் சென்றும் படிக்க முடியவில்லை. இந்த சூழலில் எங்களால் எப்படித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் பேசிய மாணவர்கள், ''இதனால் தேர்வு அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். அல்லது பாடத்திட்டத்தைக் குறைத்து அதற்கேற்ற கேள்வித்தாளைத் தயார் செய்ய வேண்டும். அது எங்களின் சிரமத்தை ஓரளவேனும் குறைக்கும்'' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

பள்ளி வேலை நாட்கள் இல்லாத தினங்களுக்கும் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திப்பதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x