Published : 22 Oct 2019 09:30 AM
Last Updated : 22 Oct 2019 09:30 AM

இனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: மாணவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் அறிவுரை

நாகப்பட்டினம்

இனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்து பெற்றோருக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

நாகப்பட்டினம் நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் நடராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ‘பட்டினி இல்லா உலகுக்கு சத்தான உணவு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.புவனேஸ்வரி வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நாகை மாவட்ட புள்ளியியல் அலுவலர் ப.அந்துவன் சேரல், பட்டினிச் சாவுகளை தடுக்க மத்திய அரசு எடுத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்கினார். கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் பேசும்போது கூறியதாவது:

தீபாவளிக்காக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உட்பட அனைத்து விவரங்களும் உள்ள அடைக்கப்பட்ட உணவு பாக்கெட்டுகளைத்தான் வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் போது குறிப்பிட்ட அளவை மீறி செயற்கை நிறமிகளை பயன்படுத்தக் கூடாது.

உணவு விற்பனையில் ஏதேனும் குறைபாடு தெரிந்தால் மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற செல்போன் எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் செய்வது குறித்தும், இனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்தும் பெற்றோருக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

உணவு பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார். நிறைவாக, பள்ளியின் அறிவியல் ஆசிரியை மீனா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x