Published : 22 Oct 2019 07:58 AM
Last Updated : 22 Oct 2019 07:58 AM

விளையாட்டை தெரிந்துகொள்வோம்: - சுமோ 

பி.எம்.சுதிர்

விளையாட்டுக்கள் என்றதும் நம் நினைவுக்கு வருவது கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள்தான். ஆனால் இதையும் தாண்டி ஏராளமான விளையாட்டுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்பகுதியில் பார்ப்போம்:

சுமோ மல்யுத்தம்

ஒருசில விளையாட்டுகளைச் சொன்னதும் குறிப்பிட்ட ஒரு நாடு நம்நினைவுக்கு வந்துபோகும். அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று சுமோமல்யுத்தம். சுமோ மல்யுத்தம் என்றதும் நம் நினைவுக்கு வருவது இடையில் அரையாடை மட்டுமே அணிந்து
கொண்டு, மல்யுத்த போஸில் நிற்கும் ஜப்பானிய குண்டு வீரர்கள்தான். ஆம் சுமோ மல்யுத்தம் முழுக்க முழுக்க ஜப்பானோடு தொடர்புடையது.

ஜப்பானில் கி.மு. முதலே சுமோ மல்யுத்தங்கள் நடந்து வந்திருப்பதாக அந்நாட்டின் வரலாறு கூறுகிறது. ஆரம்ப காலங்களில் பயிர்களை விளைவிப்பதற்காக ஜப்பானிய வயல்களை உழுவதற்கு முன்பு, அந்த வயல்வெளியில் சுமோ மல்யுத்த போட்டிகளை நடத்தி வந்துள்ளனர். பயிர் விளைச்சல் அமோகமாக இருக்க கடவுளை வேண்டுவதற்காக இப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பிற்காலத்தில் வயல்களில் இருந்த இந்த விளையாட்டு அரச சபைகளுக்கு வந்துள்ளது. மன்னர்களின் பொழுது போக்குக்காகவும், சிறந்த சாமுராய் யார் என்பதை நிரூபிப்பதற்காகவும் இப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. சாமுராய் போர்வீரர்கள் தங்கள் உடல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த விளையாட்டை பயன்படுத்திக் கொண்டனர்.

சுமோ விளையாட்டின் விதி மிகவும் எளிமையானது. இது கிட்டத்தட்ட நம் ஊர் மல்யுத்த போட்டியைப் போன்றதுதான். சுமோவுக்கும் மல்யுத்தத்துக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. மல்யுத்தத்தில் பெரும்பாலும் எதிராளியின் காலை வாரிவிட்டு அவரை வீழ்த்த முயற்சி செய்வார்கள். ஆனால், சுமோவில் எதிராளியை நேரடியாக தள்ளி வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

சுமோ விளையாட்டில் இடுப்பில் அரையாடையை மட்டும் அணிந்த, சாமுராய்களைப் போல் கொண்டை போட்டுக்கொண்ட இரு வீரர்கள் ஒரு 4.57 மீட்டர் விட்டத்தைக் கொண்டஒரு வட்டத்துக்குள் நின்றுகொண்டு சண்டையிடுவார்கள். இப்படி வட்டத்துக்குள் நிற்கும் வீரர்கள், தங்கள் எதிராளியை அந்த வட்டத்தில் இருந்துவெளியே தள்ளிவிட வேண்டும். அல்லது எதிராளியை தூக்கி வீசவேண்டும். எதிராளியை இப்படிவட்டத்தை விட்டு வெளியேற்றினாலோ, அல்லது மல்லாக்க தள்ளிவிட்டாலோ, புள்ளிகளைக் குவித்து வெற்றி பெறலாம். அதேநேரம் கால்களைத் தவிர உடலின் ஏதாவது ஒரு பகுதி தரையில் பட்டால், சம்பந்தப்பட்டவர் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார். சுமோ மல்யுத்த வீரர்கள் பெரும்பாலும் 150 முதல் 200 கிலோ வரை உடல் எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் 6 சுமோ மல்யுத்த தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில், வெற்றி பெறுபவர்களுக்கு ‘யோகோசுனா’ (மிகப்பெரிய சாம்பியன்) என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது. இப்பட்டத்தை வெல்லும்
வீரர்களை ஜப்பானிய மக்கள்ஹீரோக்களைப் போல் கொண்டாடுகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு மழைக்காலத்தின் இறுதியிலும் சுமோ மல்யுத்த வீரர்களுக்கு மதிப்பு கூடும். இக்காலத்தில் சுமோ வீரர்கள் வீட்டுக்குள் வந்து பீன்ஸ்களை எறிந்து,“பேய்களே ஓடிப்போய் விடுங்கள்; இந்த வீட்டுக்கு நல் அதிர்ஷ்டம் வந்து
சேரட்டும்” என்று கத்தினால், அவ்வீட்டின் பீடைகள் ஒழியும் என்பதுநம்பிக்கையாக உள்ளது. இதனால் சுமோ வீரர்களை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல மக்கள்போட்டி போட்டுக்கொண்டு காத்திருப்பார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க ஜப்பானில் சுமோ வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால் இதை ஈடுகட்டும் வகையில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சுமோ விளையாட்டில் ஈடுபாடு கொண்டு, இதைக் கற்று வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x