Published : 22 Oct 2019 07:52 AM
Last Updated : 22 Oct 2019 07:52 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

ராஞ்சி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் சர்மா 212, அஜிங்க்ய ரஹானே 115 ரன்கள் விளாசினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 1 ரன்னுடனும், ஜுபைர் ஹம்சா ரன் ஏதும் எடுக்காத நிலையில் களத்தில் இருந்தனர். நேற்று3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்துவிளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 56.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக ஜுபைர் ஹம்சா 62 ரன்கள் சேர்த்தார்.

டு பிளெஸ்ஸிஸ் 1, தெம்பா பவுமா 32, ஹன்ரிச் கிளாசென் 6, ஜார்ஜ் லிண்டே 37, டேன் பியட் 4, ரபாடா 0, அன்ரிச் நார்ட்ஜே 4 ரன்களில் நடையை கட்டினர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் ஷமி, ஷாபாஸ் நதீம், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பாலோ-ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.
மீண்டும் ஒருமுறை அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக படையெடுத்தபடி பெவிலியனுக்கு திரும்பினர். குயிண்டன் டி காக் 5, ஹம்சா 0, டு பிளெஸ்ஸிஸ் 4, தெம்பாபவுமா 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் உமேஷ் யாதவ் வீசிய பவுன்ஸர் பந்து தொடக்க வீரரான டீன் எல்கரின் (16) ஹெல்மெட்டை பதம் பார்த்தது.

இதனால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். மூளையில் அதிர்ச்சி ஏற்பட்ட அவருக்கு மாற்று வீரராக தியூனிஸ் டி ப்ரூயின் களமிறக்கப்பட்டார். ப்ரூயின் சற்று நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் விக்கெட்கள் சரிந்தது. ஹன்ரிச் கிளாசென் 5, ஜார்ஜ் லிண்டே 27, டேன் பியட் 23, ரபாடா 12 ரன்களில் நடையை கட்டினர்.

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 46 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. தியூனிஸ் ப்ரூயின் 30, அன்ரிச் நார்ட்ஜே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க 203 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது. மொகமது ஷமி 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

எஞ்சிய இரு விக்கெட்களையும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் இன்றைய ஆட்டத்தில் விரைவாக வீழ்த்த முயற்சிக்கக்கூடும். ஏற்கெனவே முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய டெஸ்டிலும் இந்திய அணியின் வெற்றி உறுதியாகி உள்ளதால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்ற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x