Published : 22 Oct 2019 07:48 am

Updated : 22 Oct 2019 07:48 am

 

Published : 22 Oct 2019 07:48 AM
Last Updated : 22 Oct 2019 07:48 AM

உங்களிடமிருந்து நாங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்: மெட்ராஸ் கலைஞர்களை சீனாவுக்கு அழைத்த பிரதமர் சூ என் லாய்

zhou-enlai-visit-to-chennai

மெட்ராஸ் பட்டணத்துக்கு வருகை தந்த சீனப் பிரதமர் சூ என் லாய் உரையின் நேற்றைய தொடர்ச்சி...

"எல்லா விவகாரங்களிலும் நம்மிருநாடுகளுக்கும் ஒரே மாதிரியான கருத்துகள் இல்லை, இருக்கவும் முடியாது. பிரதமர் நேரு சில நாட்களுக்கு முன்னால் கூறியதைப் போல, 'எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல விஷயங்களில் நாம் ஒத்துப்போகிறோம். அவற்றில் நாம் இணைந்து செயல்பட முடியும். கருத்து வேற்றுமை உள்ள விஷயங்களிலும் அது நட்புரீதியிலான கருத்து வேறுபாடே தவிர, நம்முடைய நட்புணர்வையோ ஒத்துழைப்பையோ பாதிக்கும் வகையில் இல்லை'’. பிரதமர் நேருவின் இந்தக் கருத்துகளை நான் அப்படியே ஏற்கிறேன்.

நம்மிரு நாடுகளும் உலக சமாதானத்தைப் பாதுகாப்பதிலும் சர்வதேச ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதிலும் நம்முடைய பங்களிப்பை முழுதாகச் செலுத்த வேண்டும் என்று விரும்பு கிறேன்.

"இந்தியாவும் சீனமும் கொண்டுள்ள நட்புறவுக்குப் பின்னால் மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. காலம் எப்படி தொடர்ந்து நடைபோடுகிறோ அப்படியே நம்முடைய நட்புறவும் நிரந்தரமாக முன்னேற்றமடைய வேண்டும். நம்மிரு நாட்டு மக்களும் பரஸ்பர
புரிந்துகொள்ளலை மேலும் ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும், ஒருவர்மற்றவரிடமிருந்து மேலும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நம்முடைய நட்புறவு தொடர்ந்து வளர்ச்சி அடையும். இப்போது நான்இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வதன் நோக்கங்களில் இதுவும் ஒன்று. உங்களுடைய கலாச்சார, பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

மெட்றாஸ் கலாச்சாரம்

டெல்லி, பூனா, பாம்பே, பெங்களூர் ஆகிய நகரங்களில் மேற்கொண்ட என்னுடைய இந்தப் பயணத்தின் மூலம் நான் கண்டுபிடித்தது என்னவென்றால், இந்திய மக்கள் கலாச்சாரத்திலும் கலைகளிலும் மிகச் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறீர் கள் என்பதுதான். நவீன அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவதிலும் நீங்கள் நல்ல தொடக் கத்தைக் கொண்டிருக்கிறீர்கள். நான் இப்போது மெட்றாசில் இருக்கிறேன். இங்கு நான் வந்துசேர்ந்து ஒரு சில மணி நேரங்கள்தான் ஆகியிருக்கிறது என்றாலும், இந்தியாவின் கலாச்சாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது மெட்றாஸ் மாநகரமும் அதன் மக்களும் என்பதை அறிந்துகொண்டுவிட்டேன். அத்துடன் இந்தியக் கலாச்சாரத்துக்கு தன்னிகரில்லாத பங்களிப்பைச் செய்
திருப்பது மெட்றாஸ் கலாச்சாரம் என்பதையும் கண்டுகொண்டேன். உங்களிடமிருந்து நாங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும், அவை எங்களுக்கு மிகவும் பயன்படும் என்று நம்புகிறோம்.

"இந்திய சீன நட்புறவு மேலும் வளரட்டும், ஒவ்வொரு நாளும் பரஸ்பர புரிந்து கொள்ளல் மூலம், நம்மிரு நாடுகளின் அனுபவங்களிலிருந்து பாடங்களைப் படிப்பதன் மூலம் வளர்ச்சி பெறுவோம். தலைமுறை தலைமுறையாக இந்திய,
சீன மக்கள் ஒத்துழைத்து, நண்பர்களாக வாழட்டும். உலக சமாதானத்தைக் காப்பதில் இந்திய சீன மக்கள் சகோதர உணர்வுடன் தோளோடு தோள்நின்று வாழட்டும். சீன-இந்திய நட்புறவு நீடூழி வாழ்க, பஞ்ச சீலம் நீடூழி வாழ்க, உலக சமாதானம் நீடூழி வாழ்க" என்று உரையாற்றினார் சூ என்-லாய். (மக்கள் உற்சாக கரகோஷம்.)

சீன, இந்திய தேசிய கீதங்களை இசைத்தவுடன் நிகழ்ச்சி நிறைவடைந் தது.

ஜெமினி ஸ்டுடியோ

மெட்றாஸ் நகர வரவேற்புக்குப் பிறகு அன்று மாலையே ஜெமினி ஸ்டுடியோவுக்கு சென்ற சீனப் பிரதமர் சூ என் லாய், திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார்.

புதிதாக தயாரித்து வரும் திரைப்படத்துக்காக நடந்த நடன படப்பிடிப்பைச் சிறிது நேரம் பார்வையிட்டார். கலைஞர்
களுக்கு ஆடைகள் தயாரிக்கும் பிரிவையும், படப்பிடிப்புச் சுருள்களைக் கையாளும் சோதனைச் சாலையையும் இதர துறைகளையும் சுற்றிப்பார்த்தார். அந்த ஸ்டுடியோவும் அதன் பல்வேறு பிரிவுகளும் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
சூ என் லாயுடன் துணைப் பிரதமர் மார்ஷல் ஹோ லுங், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்களும் சென்றனர். மாநில அமைச்சர் எம்.பக்தவத்சலம், சீனாவுக்கான இந்தியத் தூதர் ஆர்.கே.நேரு மற்றும் அவரது துணைவியார் ஆகியோரும் உடன் சென்றனர்.
சீனப் பிரதமரும் அவருடைய குழுவினரும் ஸ்டுடியோவுக்கு வந்தபோது அதன் ஊழியர்கள் திரண்டு நின்று, 'இந்தி-சீனி பாய் பாய்' என்ற ஒற்றுமை கோஷத்தை முழக்கினர். காரிலிருந்து இறங்கியதும் சூ என் லாய்க்கு மாலையணிவித்து வரவேற்றார் ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன்.

குமாரி பத்மினி பங்கேற்ற நாட்டிய படப்பிடிப்பை முக்கிய விருந்தினரும் உடன் சென்றவர்களும் கண்டு பரவசம் அடைந்தனர். அதே ஸ்டுடியோவின் இன்னொரு தளத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பையும் அனைவரும் கண்டு ரசித்தனர். எஸ்.வி.ரங்கா ராவ் எம
னாகவும், ஸ்ரீமதி எஸ்.வரலட்சுமி (சத்யவான்) சாவித்திரியாகவும் நடிக்கும் காட்சி அங்கே படமாகிக் கொண்டிருந்தது. நடிகர், நடிகைகளுடன் பேசிய சூ என் லாய் அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

திரைப்பட படப்பிடிப்பு தொடர்பாக அதிபர் வாசனிடம் சூ என் லாய் பல கேள்விகளைக் கேட்டார். இந்த தெலுங்கு திரைப்படத்தின் கதை என்னஎன்று கேட்டார். திரைப்படக் கதாசிரியரான ராமானந்த் சாகர் (பின்னாளில் ராமாயண நெடுந்தொடர் தயாரித்தவர்), ‘கொடுங்கோலனான மன்னனுக்கு எதிராக சாமானியன் நிகழ்த்தும் போர் பற்றிய கதை' என்றார். ‘அப்படியா கதை
யின் முடிவுதான் என்ன?’ என்றார் சூ என் லாய். ‘சாமானியன் இளவரசியைத் திருமணம் செய்துகொள்வதுடன் கதை சுபமாக முடிகிறது' என்றார் ராமானந்த் சாகர். ‘அப்படியா, அந்த சாமானியனை நான் பார்க்கவே இல்லையே?’ என்று பெரிய சிரிப்புடன் கேட்டார் சூ என் லாய். உடனே அங்கே சிரிப்பலை பரவியது. சாமானியனாக நடித்த நடிகர் ஜெமனி கணேசனை
அவருக்குப் பிறகு அறிமுகப்படுத்தினர்.

குமாரி பத்மினி, ராகினி ஆகியோரின் நடன நிகழ்ச்சியுடன் சூ என் லாயின் ஸ்டுடியோ விஜயம் நிகழ்ச்சி முடிந்தது.

கலைஞர்களுடன் சூ என் லாய்

ராஜ் பவனில் தங்கியிருந்த சூ என் லாயை, தென்னிந்தியாவைச் சேர்ந்த நாடக, திரைப்படக் கலைஞர்கள் சுமார் 50 பேர் அன்றிரவு சந்தித்து உற்சாகமாக உரையாடினர். சாதாரண முறையில் கலைஞர்களை சந்தித்த அந்த நிகழ்ச்சியை சூ என் லாய் மிகவும் ரசித்தார். எந்தவித சம்பிரதாய நடைமுறைகளும் இல்லாததால் கலைஞர்களிடம் நெருங்கிச் சென்று அவர்களைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர்கள் விரும்பியபடியே புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதித்தார்.

தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தின் செயலர் டி.என்.சிவதாணு அனைத்துக் கலைஞர்களையும் சூ என் லாய்க்கு அறிமுகம் செய்து
வைத்தார். அனைவருடனும் அவர் அன்போடு கை குலுக்கினார். சங்கத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்தார் என்.எஸ். கிருஷ்ணன்.

சங்கத்தின் நடவடிக்கைகளைச் சுருக்கமாகத் தெரிவித்த கே.சுப்பிரமணியம், சூ என் லாயை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
வெண்கலத்தில் செய்யப்பட்ட நர்த்தன நடராஜர் சிலையை அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினர். அத்துடன் அசோக சக்கரம்
பொறிக்கப்பட்ட மோதிரத்தையும் பிரதமர் நேருவின் உருவப் படத்தையும் வழங்கினர்.

சந்திப்பதற்கு வாய்ப்பளித்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்த சூ என் லாய், பரிசுகளுக்காகவும் நன்றி தெரிவித்தார். அவர்களுடைய சாதனைகளை சீன மக்களிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தார். இந்திய கலாச்சாரத்தின் மையம் மெட்றாஸ் என்று பாராட்டினார். நானோ, என்னுடன் வந்துள்ள துணைப் பிரதமரோ கலைகளில் வல்லவர்கள் இல்லை என்பதால் மெட்றாஸைச் சேர்ந்த கலைஞர்கள் சீனத்துக்கு வந்து தங்களுடைய சாதனைகளை சீன மக்களிடம் நேரடியாகவே தெரிவிக்கலாம் என்று அழைப்பு
விடுத்தார். உங்களிடமிருந்து கலையுலக வெற்றிகளை அவர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்றார். எதிர்காலத்தில் நாங்களும் உங்களுடன் கலாச்சாரத் தொடர்பு வைத்துக் கொள்வோம், ஏனென்றால் உங்களிடமிருந்த நாங்களும் கற்றுக்கொள்ள அது உதவி
யாக இருக்கும் என்றார்.

(படம், செய்தி: இந்து ஆவணக் காப்பகம்)

தமிழில்: சாரி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Zhou enlaiபிரதமர் சூ என் லாய்மெட்றாஸ் கலாச்சாரம்ஜெமினி ஸ்டுடியோகலைஞர்களுடன் சூ என் லாய்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author