Published : 21 Oct 2019 02:47 PM
Last Updated : 21 Oct 2019 02:47 PM

500 கி.மீ. பயணித்து ரத்த தானம் செய்த இளைஞர்: பிரசவித்த பெண்ணைக் காப்பாற்றினார்

பெர்ஹாம்பூர்

திலிப் பாரிக் என்னும் இளைஞர் 500 கி.மீ. தூரம் பயணித்து, இளம் தாய் ஒருவருக்கு மிக அரிய வகை ரத்தத்தை அளித்து, அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் மாண்டசிங்கி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் சபிதா ராய்த்தா. இவர் கடந்த அக்டோபர் 13-ம் தேதி, ஒரு குழந்தைக்குத் தாயானார். அவருக்கு, எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது.

ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், பிரசவத்துக்குப் பிறகு சபிதாவின் நிலை மிகவும் மோசமானது. அவரின் ரத்தம் மிக மிக அரிய ரத்த வகையான பாம்பே A+ve ஆக இருந்தது. உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இருந்தும் கிடைக்காததால், சபிதாவுக்கு ரத்தம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

மருத்துவமனை ரத்த வங்கியின் பொறுப்பாளரும் மருத்துவருமான ரஷ்மிதா பானிகிரஹி, சபிதா தொடர்பான தகவலை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த ரத்தக் கொடையாளர்கள் குழுவும் இருந்தது. அக்குழுவில் இருந்த ரூர்கேலா பகுதியைச் சேர்ந்த திலிப் பார்க் என்னும் இளைஞர் ரஷ்மிதாவின் செய்தியைப் பார்த்தார்.

உடனடியாக பெர்ஹாம்பூர் மருத்துவமனைக்கு வந்து ரத்த தானம் செய்ய ஒப்புக்கொண்டார். கடந்த சனிக்கிழமை அன்று ரத்த வங்கிக்கு வந்த அவர், ரத்தத்தைக் கொடுத்தார். அது உடனடியாக சபிதாவின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது சபிதாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேரில் ஒருவருக்கு, பாம்பே A+ve ரத்த வகை இருக்கும் என்றார் மருத்துவர் ரஷ்மிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x