Published : 21 Oct 2019 11:06 AM
Last Updated : 21 Oct 2019 11:06 AM

நிகழ்வுகள்: பிகாசோ பிறந்தநாள் அக்டோபர் 25

சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள் அக்டோபர் 22

இந்தியா முதல் முறையாக நிலவுக்கு அனுப்பிய விண்கலமான சந்திரயான் 1, 2008 அக்டோபர் 22 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ வளாகத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு முன்பு அமெரிக்கா, சீனா, ஜப்பான்உள்ளிட்ட வல்லரசு நாடுகளே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளன. இந்தியாஅனுப்பிய சந்திரயான் 1 விண்கலம்,
நிலவில் நீர் மூலக்கூறுகள் இருந்ததை கண்டுபிடித்து அதன் மூலம் நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்தது.

ஐபாட் வெளியான நாள் அக்டோபர் 23

அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்க இசை கேட்கும் கருவி ஐபாட். இதன் முதல் வடிவம் 2001 அக்டோபர் 23 அன்று வெளியானது. இசை, பாடல்களை உயர் தரத்தில் கேட்பதற்கான கையடக்க கருவியாக ஐபாடை அறிமுகப்படுத்தும் யோசனை ஸ்டீவ்ஜாப்ஸின் மூளையில் உதித்தது. ஐபாட்கருவியின் பிந்தைய வடிவங்கள் ஒளிப்படங்கள், காணொளிகள், இசைத்துணுக்குகள், பாடல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வசதியையும் தரவுகளைச் சேகரித்து
வைப்பதற்கான வசதியையும் உள்ளடக்கியதாக இருந்தன.

ஐநா சபை தொடங்கப்பட்டது அக்டோபர் 24

1945 அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது. ஐநா சாசனம் (UN Charter) உறுப்பு நாடுகள் பலவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுநடைமுறைக்கு வந்த நாளே ஐநாதொடங்கப்பட்ட நாளாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இன்னொரு போரைத் தவிர்க்கும் நோக்கத்தில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை, சமாதானம், நல்லிணக்கம். அரசியல், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்ப்பதே இந்த அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம்.

தொடக்கத்தில் 50 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த ஐநா இப்போது 193 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டுவருகிறது. 1948 முதல் ஐநா தொடங்கப்பட நாள் ஐநா நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐநாமுன்னிறுத்தும் கொள்கைகளை பரப்பவும் அதன் சாதனைகளை கொண்டாடவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.

பிகாசோ பிறந்தநாள் அக்டோபர் 25

உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோ 1881 அக்டோபர் 25 அன்று ஸ்பெயினில் உள்ள மலாகா நகரில் பிறந்தார். 18 வயதுக்கு பிந்தைய வாழ்வின் பெரும்பகுதியை பிரான்ஸில் கழித்தார். ஓவியராகவும் சிற்பியாகவும் 20-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க கலைஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தார். கியூபிச இயக்கம், வெவ்வேறு வடிவங்களைச் சேர்த்து ஓவியங்கள் வரையும் கொலாஜ் பாணி, என கலைத் துறையில் பல புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய கண்டுபிடிப்புகளுக்கு இவர் பங்களித்துள்ளார். 1920-களுக்குப் பின் சர்ரியலிஸ ஓவியங்களை அதிகமாக வரைந்தார்.

- தொகுப்பு கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x