Published : 21 Oct 2019 08:47 AM
Last Updated : 21 Oct 2019 08:47 AM

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சுற்றுச்சூழலை காக்க பசுமை பட்டாசுகள்: தீபாவளியின்போது காற்று, ஒலி மாசு பாதிப்பு குறையும்

இ.மணிகண்டன்

சிவகாசி

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சிவகாசியில் பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தீபாவளிப் பண்டிகையின்போது காற்று, ஒலி மாசு பாதிப்பு வெகுவாகக் குறையும்.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுவதால் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதில், பட்டாசு தயாரிக்கப் பேரியம் பயன்படுத்தக் கூடாது. சரவெடிகள் தயாரிக்கக் கூடாது. புகை மற்றும் குறைந்த சப்தம் கொண்ட பசுமைப் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து சிவகாசி மற்றும் சுற்றியுள்ள 1,070 பட்டாசு ஆலைகள் உற்பத்தி செய்ய முடியாமல் 3 மாதங்களுக்கு மூடப்பட்டன. இதன் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

அதைத் தொடர்ந்து ‘நீரி’ எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வக நிபுணர்கள் கடந்த மார்ச் மாதம் சிவகாசியில் பசுமை பட்டாசுக்கான புதிய பார்முலாவை ஆய்வு செய்தனர். பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தி பேரியம் நைட்ரேட் அளவை குறைத்து அதற்கு மாற்றாக ஜியோலேட் உள்ளிட்ட சில ரசாயனக் கலவைகளை சேர்க்கும் புதிய பார்முலாவை வழங்கினர்.

அதைக்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கும் பணி சிவகாசியில் தொடங்கியது. புகை மாசுவை ஏற்படுத்தும் பேரியம் நைட்ரேட் கலவையை 25 முதல் 30 சதவீதம் குறைத்து அதற்கு மாற்றாக ஜியோலேட் உள்ளிட்ட சில ரசாயனக் கலவையை பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் கூறியதாவது:

புதிய பார்முலாவைப் பயன்படுத்தி முதல் கட்டமாக தரைச் சக்கரம், கம்பிமத்தாப்பு முதல் வானில் வர்ண ஜாலங்களைக் காட்டும் பேன்ஸி ரகப் பட்டாசுகள் என அனைத்துவித பட்டாசுகளையும் பசுமைப் பட்டாசுகளாக தயாரித்து வருகிறோம்.

பசுமைப் பட்டாசுகள் மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும். பசுமை பட்டாசுக்கான புதிய ரசாயன மூலப்பொருட்கள் மலிவான விலையில் எளிதில் கிடைப்பதால் எந்தவித சிரமமும் இல்லாமல் பசுமைப் பட்டாசு தயாரிக்க முடிகிறது.

பசுமைப் பட்டாசுக்கான பிரத்யோக லோகோவை (லட்சினை) தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. பசுமை பட்டாசுகள் அனைத்திலும் பசுமை வடிவ லோகோவும், கியூஆர் கோடும் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எனவே, அன்பான மாணவர்களே... தீபாவளியைக் கொண்டாட பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்துங்கள். அதன்மூலம் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படுவதைக் குறைக்கலாம். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x