Published : 21 Oct 2019 08:26 AM
Last Updated : 21 Oct 2019 08:26 AM

இந்திய கலாச்சாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பு: மெட்றாஸ் பட்டணத்துக்கு சூ என்-லாய் பாராட்டு; நகரில் சீனப் பிரதமர்; மக்கள் வரவேற்புக்கு பதில்

சென்னை, டிச.5, 1956: ‘‘மெட்றாஸ் மாநகருடன் ஏற்பட்ட முதல் தொடர்பிலிருந்தே தெரிந்துகொண்டேன், மெட்றாஸ் மாநகரமும் அதன் மக்களும் இந்தியக் கலாச்சாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்" என்று பாராட்டினார் சீனப்பிரதமர் சூ என்-லாய்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நகருக்கு வந்த அவர், கார்ப்பரேஷன் விளையாட்டரங்கில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் மக்களிடையே பேசினார். அதற்கும் முன்னதாக ராஜ் பவ னில் சி.ராஜகோபாலாச்சாரியாருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
சீனப் பிரதமரை வரவேற்க விளையாட்டரங்கில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். நகர மக்கள் தனக்களித்த வரவேற்பை ஏற்று சூ என்-லாய்உரை நிகழ்த்தினார். சூ என்-லாயையும் அவருடைய குழுவினரையும் மெட்றாஸ் நகர மேயர் கே.என்.சீனிவாசன், துணை மேயர் கே.ராமதாஸ், ஆணையர் பாலசுந்தரம் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர். அரங்கின் மேல்தளத்துக்கு அவரை கூட்டிச் சென்ற நகர மேயர், மெட்றாஸ் நகரமன்ற உறுப்பினர்களுக்கும், மாநகராட்சித் துறைத் தலைவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மைதானத்தைப் பார்த்தபடி அமைக்கப்பட்டிருந்த அந்த மேடை, நன்குஅலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒளிவீசும் விளக்குகள் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. நகரின் முக்கியப் பிரமுகர்களுக்கு அந்த மேடைக்கு அருகில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. சீனத் தலைவர்களுடன் சீனாவுக்கான இந்தியத் தூதர் ஆர்.கே.நேருவும் அமர்ந்திருந்தார். (முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் உறவினரான அவருடைய முழுப் பெயர் ரத்தன் குமார் நேரு). வேளாண் அமைச்சர் எம். பக்தவத்சலம், மெட்றாஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் ஆகியோரும் வந்திருந்தனர்.

விளையாட்டுத் திடலில் பிரமுகர்கள் அனைவரும் அரை வட்ட வடிவில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கும் பின்னாலிருந்த வாயில்களில் பொதுமக்களும் அமரவைக்கப்பட்டனர்.

விழா தொடங்கும்வரை மக்கள் அரங்குக்குள் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களில் பலர், தங்களின் அமைப்புகள் சார்பான பதாகைகளுடன் 'இந்திய–சீன நட்புறவு வாழ்க' என்ற கோஷங்களுடன் வந்தனர்.

மெட்றாஸ் மாநகர மக்களின் அன்பு, நட்பின் அடையாளமாக வெள்ளியால் செய்யப்பட்ட அசோக ஸ்தூபியின் சிறு வடிவத்தை சீனப் பிரதமரிடம் அளித்தார் மேயர்.

மேயர் வரவேற்புரை

“சீனப் பிரதமரின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகை, இன்னும்பல ஆண்டுகளுக்கு மக்களால்நினைவுகூரப்படும். இந்தியாவும் சீனாவும் உலகின் இரண்டு பெரிய, புராதனமான நாகரிகங்களையும் ஆன்மிகத்தையும் கலாச்சாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள். இரு நாடுகளிலும் பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் நிலவுகின்றன.

இவ்விரு நாடுகளின் பழம்பெருமை மிக்க கலாச்சாரங்களும் ஆசியக் கண்டத்துக்கு மட்டும் பெருமை சேர்ப்பதல்ல, உலகம் அனைத்திலுமே மனித குலத்தின் தார்மிகங்களையும் நெறிமுறைகளையும் வளப்படுத்தக்கூடியவை.

நம்மிரு நாடுகளுக்கும் இடையி லான நட்புறவு, ஆசியா தனது இலக்கை நோக்கி ஒற்றுமையாக நடைபோடத் தொடங்கிவிட்டது என்று உலகமே அறி்ந்து கொள்வதற்கான வாய்ப்பு" என்றார் மேயர்.

சூ என் லாயின் பதில் உரை

"இத்தனை நண்பர்களை ஒரே இடத்தில் நான் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பளித்த மெட்றாஸ் மாநகராட்சி மேயருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகுந்த அன்பான இந்த வரவேற்புக்காக மெட்றாஸ் மாநகர மக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீன மக்கள் மீது இந்தியர்

கள் கொண்டுள்ள நட்புணர்வின் அடையாளமாகவே இதை நான்எடுத்துக்கொள்கிறேன். மெட்றாஸ் மாநகர மக்களுக்கும் இந்தியர்களுக்கும் என்னுடைய சகோதர உணர்வை இந்நேரம் தெரிவித்துக்கொள்கிறேன்.

"சீனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்புணர்வை வலுப்படுத்துவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம். இந்தியாவில் தங்கியிருக்கும் நாட்களில், நாங்கள் எந்த ஊருக்குச் சென்றோம் என்பது முக்கியமில்லை - எங்கு சென்றாலும் இந்திய மக்களும் இந்திய அரசும் சீன மக்கள் மீதும் சீன அரசின் மீதும் காட்டும் பாச உணர்வையே கண்டு வருகிறோம். உங்களுடைய இந்த அன்பு எங்களை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

அதே சமயம் இந்த அன்பு, ஆசிய-ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உலக சமாதானத்துக்காக பெரிய தற்காப்பை ஏற்படுத்திவிட முடியும் என்பதற்கு உத்வேகமாக அமைந்திருக்கிறது.

இந்திய – சீன கூட்டுறவு

"சர்வதேச விவகாரங்களில் நம்மிருநாடுகளுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. காலனிகளை உருவாக்குவதற்கு எதிர்ப்பு, தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பது, பிளவு வேலைகளை எதிர்ப்பது, சர்வதேச கூட்டுறவு, போரை எதிர்ப்பது, சமா
தானத்தை ஆதரிப்பது ஆகியவற்றில் நம்மிரு நாடுகளும் ஒரே மாதிரியான நிலையைத்தான் எடுத்து வருகின்றன.

நம்மிரு நாடுகளும் இணைந்தே பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினோம். இவற்றை மற்றவர்களுக்கும் விளக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நட்புணர்வுடனான ஒத்துழைப்பு, சர்வதேச அளவில் நிகழும் பதற்றங்களைக் குறைப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் நம்முடைய நட்புறவு முக்கியமான பங்கை மேற்கொள்ளப் போகிறது.

(படம், செய்தி: இந்து ஆவணக் காப்பகம்)

தமிழில்: சாரி

தொடர்ச்சி நாளை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x