Published : 21 Oct 2019 07:38 AM
Last Updated : 21 Oct 2019 07:38 AM

பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறு: ஆபத்து காலத்தில் முதலுதவி சிகிச்சை தருவது எப்படி?

சில சமயங்களில் மக்கள் தவறான செயல்களை மேற்கொள்வதால் பாதிப்பு ஏற்படலாம். உதாரணமாக பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தத்தை எடுப்பார்கள்.

இது தவறானது. சில நேரம் இது பாதிக்கப்பட்டவர், காப்பாற்ற முயல்பவர் ஆகிய இருவருக்குமே ஆபத்தாகி விடும் என்று தேவ கோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடு தொடர்பான நிகழ்ச்சியில் நேரில் விளக்கப்பட்டது. பாம்பு கடித்தல், தீக்காயம், காய்ச்சல், வலிப்பு, கீழே விழுதல் போன்ற விபத்துகளில் எவ்வாறு முதலுதவி செய்வது என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் விளக்கினார்கள்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகன பொறுப்பாளர்கள் சரண்யா, மருதுபாண்டியன், சார்லஸ் ஆகியோர் முதலுதவி தொடர்பாக நேரடி விளக்கம் அளித்ததாவது:

பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி சிலர் ரத்தத்தை எடுப்பார்கள். இது தவறானது. சில நேரம் இது இருவருக்குமே ஆபத்தாகி விடும். பாம்பு கடித்தால் அந்த இடத்தில் இறுக்கி கட்டிக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் ஓடவோ, நடக்கவோ விடக்கூடாது. பாம்பு கடித்த இடத்தை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். மருத்துவமனைக்கு சென்ற பிறகு முறையான சிகிச்சை மேற்கொள்வார்கள்.

தீக்காயம் ஏற்பட்டால்...

தீக்காயம் ஏற்பட்டால் சிறிய கொப்பளமாக இருந்தால் தண்ணீரில் நனைக்கலாம். சில்வர் ஆயின்ட்மென்ட் போடலாம். மண்ணெண்ணெய் ஊற்றினால்தோல் கருகி விடும். போர்வை போட்டுபோர்த்தி உருட்டி விடவேண்டும்.

காய்ச்சல் வந்தால்...

காய்ச்சலால் நரம்பு பாதித்து இருந்தால் சுடுதண்ணீரில் நனைக்கப்பட்ட ஈரத்துணியால் துடைத்துவிட வேண் டும். பத்துப் போட்டு விடலாம்.

நெஞ்சு வலி ஏற்பட்டால்...

நெஞ்சு வலி என்றால் படுக்க வைக்கக்கூடாது. உட்கார வைத்து ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தி விடவேண்டும்.

வலிப்பு நோய்க்கு...

வலிப்பு வந்தால் இரும்பு சாவி கொடுக்க கூடாது. இரும்பு பொருள் எதையும் கொடுக்க வேண்டாம். அந்த நேரத்தில் நாக்கை கடிப்பார்கள். இடதுபக்கம் தலையை மட்டும் திருப்பிவிட வேண்டும். நாக்கையும், உதட்டையும் கடித்துக் கொண்டு காயம் ஏற்
படாமல் தவிர்க்கும் பொருட்டு கனமான துணியை வாயில் வைக்க வேண்டும்.

கத்தியால் வெட்டுப்பட்டால்...

காயம்பட்ட இடத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும். துணியை வைத்துகட்டு போடவேண்டும்.

மயங்கி விழுந்தால்...

மயங்கி விழுந்தால் கையில் நாடித் துடிப்பு பார்க்கவேண்டும். விரலை வைத்து தொண்டையில் துடிப்பு பார்க்கவேண்டும். இதை நாம் செய்யக்கூடாது. பயிற்சி பெற்ற செவிலியர், மருத்துவர் மட்டுமே பார்க்க வேண்டும். வாய் வழியாக சுவாசம் கொடுக்கப்பட வேண்டும்.

எலும்பு முறிந்தால்...

எலும்பு முறிவு ஏற்பட்டால் எலும்பு உடைந்த இடத்தில் அட்டை, மட்டை கொண்டு துணி வைத்துக் கட்டி விடவேண்டும். மேலும் அடிபட்ட இடம் அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது பக்கவாட்டில் உள்ள எலும்பு உடையாமல் தடுக்க உதவும். அருகில் உள்ள நீளமான மட்டை அல்லது அட்டை கொண்டு இதைச் செய்யலாம்.

விஷம் சாப்பிட்டால்...

பூச்சி மருந்து உள்ளிட்ட விஷத்தைசாப்பிட்டால் வாய் வழியே எதுவும் கொடுக்கக்கூடாது. வாந்தி எடுப்பார்கள். எதுவும் செய்யக் கூடாது.

108 வாகனத்தின் சிறப்பு

பொதுவாகவே எந்த நோயாளியையும் ஆட்டோ, வண்டி இவற்றில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை விட 108 வாகனத்தில் சென்றால் சரியான சிகிச்சையுடன், முதலுதவியும் கிடைக்கும். வண்டியில் இரண்டு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர், ஒரு சின்ன போர்ட்டபிள் சிலிண்டரும் உள்ளது.

பிரசவத்துக்கு அருமையான வசதி: பிரசவம் எந்த நேரமும் ஏற்படலாம். கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான 14 வகையான பொருள்களுடன் டெலிவரி கிட் 108 வாகனத்தின் உள்ளேயே உள்ளது. பிரசவம் பார்க்கக்கூடிய செவிலியர்களும் உள்ளனர். தாயுக்கும், குழந்தைக்கும் தேவையான அனைத்து பொருள்களும் உள்ளே இருக்கும்.

நீரிழிவு நோய்: நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான முதலுதவிகளான சீனி கரைத்து கொடுத்தல், சாக்லேட் கொடுத்தல் ஆகியவற்றுக்கான வசதி 108 வானத்தில் உள்ளேயே இருக்கும்.

தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்ற வசதி: 108 வாகனத்தில் திருகு பலகை, சுழல் பலகை, சக்கர நாற்காலி ஆகியவை உள்ளன. தண்ணீரில் விழுந்தால் சுழல் பலகை மூலம் எளிதாக நோயாளியைத் தூக்கி விட முடியும்.

உயரத்தில் இருந்து விழுந்தால் காப்பாற்றும் வசதி: மிகவும் உயரத்தில் இருந்து விழுந்து இடுப்பு, தொடை எலும்பு முறிவு ஏற்பட்டால் நோயாளியை அசையாமல் சுழல் பலகையில் வைத்து தூக்குவது எளிது. அப்படியே அசையாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் இது பயன்படுகிறது. ஐந்தாவது மாடியில் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அவரை பாதிப்பு இல்லாமல் கீழே இறக்க சக்கர நாற்காலி உள்ளது.

ஒலியில் வித்தியாசம்: 108 வண்டி செல்லும்போது ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கு ஏற்ப ஒலி அதிகப்படுத்தும் வசதி உள்ளது. ஆட்டோ,பைக் போன்றவற்றில் செல்லும்போது எந்த நிலையில், எந்த காரணத்திற்காக செல்கிறோம் என்பது தெரியாது. ஆனால், 108 ஆம்புலன்ஸில் செல்லும்போது அதில் எழுப்பப்படும் ஒலிக்கு தகுந்தாற்போல் போக்குவரத்தில் நமக்கு முன்னுரிமைத்தரப்படும்.
மாணவர்களாகிய நீங்கள்தான் அதிகம் 108 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 108 என்ற எண்ணுக்கான தொலைபேசி தொடர்பு இலவசம்தான். இதன் கட்டுப்பாட்டு அறை சென்னையில்தான் உள்ளது.

அலைபேசி மூலம் தொடர்பு கொண்டதும் எந்த வட்டமாக இருந்தாலும் 2 நிமிடத்தில் சேவை கிடைக்க வாய்ப்புள்ளது. தீக்காயம், பிரசவம், காய்ச்சல், பாம்பு கடித்தல் போன்ற அனைத்துக்குமே தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x