Published : 19 Oct 2019 03:29 PM
Last Updated : 19 Oct 2019 03:29 PM

ராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்கை: ராஜ்நாத் சிங் அனுமதி

புதுடெல்லி

சைனிக் பள்ளிகள் என்று அழைக்கப்படும் ராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராணுவப் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளையும் சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்துள்ளார். பாலினச் சமத்துவத்தை ஊக்குவிக்கவும் ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்தவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி தொடங்கிவைத்த பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம் திட்டத்தை இது வலிமையாக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் வசதிக்கேற்றவாறு ஆசிரியர்கள், தங்கும் விடுதி, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளை விரைந்து முடிக்குமாறும் அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சைனிக் பள்ளிகள்

1961-ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் நாடு முழுவதிலும் சைனிக் ஸ்கூல் என்றழைக்கப்படும் ராணுவப் பள்ளிகளைத் தொடங்கினார். இப்பள்ளிகள் மாணவர்கள் இடையே சிறந்த திறனை வளர்த்து, அவர்களை ராணுவத்தில் சேர்க்கும் வகையில் கல்வியை அளித்து வருகின்றன.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இப்பள்ளிகளில் சிபிஎஸ்இ முறையில் கல்வி போதிக்கப்படுகிறது. தங்கி பயிலும் வசதி கொண்ட இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. மாணவிகள் சேர்க்கப்படவில்லை.

இந்திய ராணுவத்தில் தற்போது ஆண்களுக்கு இணையான பதவிகளில் பெண் அதிகாரிகளும் பணியாற்றி வரும் சூழலில், சைனிக் பள்ளிகளில் மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், சோதனை அடிப்படையில் மிசோரத்தில் இயங்கிவரும் சைனிக் பள்ளியில் 6 பெண் குழந்தைகளை கடந்த 2017-ம் ஆண்டு சேர்த்தது.

அவர்கள் அனைவரும் எந்தப் பிரச்சினையும் இன்றி தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் நாட்டில் உள்ள 33 சைனிக் பள்ளிகளிலும் பிளஸ் 2 வரை இனி பெண் குழந்தைகள் பயில அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x