Published : 19 Oct 2019 02:01 PM
Last Updated : 19 Oct 2019 02:01 PM

மாணவர்களுக்கான காய்கறித் தோட்டம்: அனைத்துப் பள்ளிகளும் அமைக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த, மாணவர்களுக்கான காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது.

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

''கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த மாணவர்களுக்கான காய்கறித் தோட்டங்களை உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் முறையான பயிற்சி ஆகியவை வழங்கப்படும். இதற்கு, கிரிஷி விக்யான் கேந்திரா (அறிவியல் தோட்ட மையம்), தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து மையம், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத்துறையின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.

தோட்டத்துக்கான எல்லைச் சுவரை அமைப்பது, நிலத்தைச் சமப்படுத்துவது ஆகியவற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாட்கள் வேலை) தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும் காய்கறித் தோட்டத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x