Published : 18 Oct 2019 05:40 PM
Last Updated : 18 Oct 2019 05:40 PM

உண்மையை மறைத்து விடுதி உணவகத்தில் சாப்பிட்ட மாணவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

லக்னோ

உண்மையை மறைத்து விடுதி உணவகத்தில் சாப்பிட்ட மாணவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது.

லக்னோ பல்கலைக்கழத்தில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் ஆயுஷ் சிங். வீட்டில் இருந்து தினந்தோறும் பல்கலைக்கழகத்துக்கு வரும் அவர், கடந்த செப். 3-ம் தேதி பல்கலை. உணவகத்துக்குச் சென்று மதிய உணவு உட்கொண்டார்.

நிர்வாக விதிகளின்படி அங்கே விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் மட்டுமே சாப்பிட முடியும். ஆனால் விதிமுறைகளை மீறி, ஆயுஷ் உணவு உண்டதாகக் கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் பிரமாணப் பத்திரம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து அங்கிருந்த மாணவர்கள் கூறும்போது, ''ஆயுஷ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர், அதுகுறித்து பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியிடம் கூறியுள்ளனர். உடனே அங்கு வந்த அவர், ஆயுஷுக்கு அபராதம் விதித்தார். உடனடியாக மன்னிப்பு கோரிய ஆயுஷ், மிகவும் பசியாக இருந்ததால் சாப்பிட்டேன் என்றார். வருங்காலத்தில் விதிமுறைகளை மீறி நடக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி வினோத் குமார் சிங், ஆயுஷுக்கு நோட்டீஸ் அளித்தார். ஒரு வாரத்துக்குள் அபராதத்தைக் கட்டவில்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தார்'' என்று தெரிவித்தனர்.

வினோத் குமார் இதுபற்றிக் கூறும்போது, ''போலியான பெயரில் உணவகம் செல்லும் ஆயுஷ், அடிக்கடி அங்குள்ள உணவை உட்கொள்வதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்றார்.

இதை அறிந்த மாணவர்கள் குழுவினர் சோகத்தில் ஆழ்ந்தனர். ''ஆயுஷ் மன்னிப்பு கேட்டபிறகும், அபராதம் விதித்தது தவறான செயல். பசியால்தான் அவன் சாப்பிட்டிருக்கிறான் என்னும்போது 20 ஆயிரம் ரூபாயை எப்படிக் கட்ட முடியும்?'' என்று கேள்வி எழுப்பினர்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x