Published : 18 Oct 2019 07:55 AM
Last Updated : 18 Oct 2019 07:55 AM

ராஞ்சியில் நாளை 3-வது டெஸ்ட் தொடக்கம்: இந்தியாவை சமாளிக்குமா தென் ஆப்பிரிக்கா?

ராஞ்சி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை அதன் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்துள்ள மயங்க் அகர்வால், முதல் டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்ட ரோஹித் சர்மா, 2-வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த விராட் கோலி மற்றும் புஜாரா, ரஹானே ஆகியோர் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து ரன்களைக்குவித்து வருகிறார்கள். இவர்களை அவுட் ஆக்குவது மிகவும் கடினமாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரான ரபாடாவே கூறியுள்ளார். இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியிலும் இவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியின் பந்துவீச்சும், பேட்டிங்குக்கு இணையானதாக உள்ளது. பொதுவாக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அதிக விக்கெட்களை வீழ்த்துவார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இணையாக முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியவேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்களைக் கொய்வது அணியின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் துவண்டு போய் உள்ளது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற நிலையில் அது களம் இறங்குகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்க்ராம், கடந்த டெஸ்ட் போட்டியில் அவுட் ஆன போது, கோபத்தால் எதிரில் இருந்த ஒரு பொருளை ஓங்கிக் குத்தியுள்ளார். இதனால் கையில் பலத்த காயமடைந்த அவர், 3-வது டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்ராம் இல்லாத நிலையில் டீன் எல்கர், டுபிளஸ்ஸி, குயிண்டன் டி காக் ஆகியோரையே அந்த அணி பேட்டிங்கில் சார்ந்துள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரை, கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவில் விக்கெட்களை எடுக்க முடியாததால் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் துவண்டு போயுள்ளனர். இந்த பிரச்சினைகளைக் கடந்து இந்தியாவின் சவாலை தென் ஆப்பிரிக்க அணி சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ராஞ்சியில் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றபோது காயம் அடைந்த சேதேஷ்வர் புஜாராவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. படம்: பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x