Published : 17 Oct 2019 08:07 AM
Last Updated : 17 Oct 2019 08:07 AM

சென்னை - திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சுவீதா ரயில் டிக்கெட் கட்டணத்தால் பயணிகள் அதிர்ச்சி: ரூ.5,300-க்கும் விற்பனையானது

சென்னை

தீபாவளியையொட்டி இயக்கப்படும் சுவிதா ரயிலில் சென்னை - திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட் ரூ.5,300-க்கு விற்பனையாகியுள்ளது.
இது ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முன்பெல்லாம் விரைவு ரயில்களின் கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வழக்கமான கட்டணம்தான் வசூலிக்கப்படும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சுவிதா ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்த சுவிதா ரயிலில் ஒவ்வொரு 20 சதவீத டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 2ஏசி, 3ஏசி, படுகை வசதி பெட்டிகள் என தலா 20 சதவீதம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பயணம் செய்வது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.5000-ஐ தாண்டியிருப்பது, பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சென்னை - திருநெல்வேலிக்கு வரும் 25-ம் தேதி இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலில் (82601) 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5300-க்கும், 3-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.3,745-க்கும் விற்கப்பட்டுள்ளது. இதேபோல், 28-ம் திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலில் (82602) 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,175-க்கும், 3-ம் வகுப்பு ஏசியில் 3,655-க்கும் டிக்கெட் விற்பனையாகியுள்ளது.

தேஜஸ் சொகுசு ஏசி விரைவு ரயிலில் முதல் வகுப்பு இருக்கை வசதியில் ஒரு டிக்கெட் ரூ.2100-க்கும் இருக்கை வசதியில் ஒரு டிக்கெட் ரூ.1035-க்கும் விற்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவே சுவிதா சிறப்பு ரயில்களில் 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.4450-க்கும், 3-ம் வகுப்பு ஏசியில் ரூ.3155-க்கும் விற்பனையாகியுள்ளது.

நிர்வாகம் சொல்வது என்ன?

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காத்திருப்பு பட்டியல்களில் அதிகமாக உள்ள வழித்தடங்களை தேர்வு செய்து, புதிய ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் தொடர்பாக ரயில்வே வாரியத்தின் அறிவிப்புகளைத் தான் செயல்படுத்துகிறோம். கடந்த சில
மாதங்களில் சுவிதா ரயில்களில் அதிகளவில் மக்கள் பயணிக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது சுவிதா ரயில்களில் பெரும்பாலான டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டது’’ என்றனர்.

டிஆர்இயு கண்டனம்

டிஆர்இயு மூத்த தலைவர் ஆர்.இளங்கோவன் கூறும்போது, ‘‘2014-க்கு பிறகு புதிய ரயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண மக்கள் இதில் பயணிக்க
முடியாது. ஆம்னி பேருந்துகளை போல், கட்டணத்தை பல மடங்குஉயர்த்துவது தவறு. பொதுத்துறை நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. பயணிகள் ரயில்களில் இழப்பு ஏற்பட்டால், மத்திய அரசு மானியம் அளிக்க வேண்டுமே தவிர, மக்கள் மீது இதை திணிக்க கூடாது. எனவே, சுவிதா ரயில்களை இயக்குவதை நிறுத்திவிட்டு, வழக்கமான கட்டணத்தில் சிறப்பு ரயில்
களை இயக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x