Published : 16 Oct 2019 08:08 AM
Last Updated : 16 Oct 2019 08:08 AM

போஸ்ட் பெய்ட் சேவை தொடங்கிய பிறகு காஷ்மீரில் எஸ்எம்எஸ்-க்கு தடை

காஷ்மீரில் போஸ்ட் பெய்ட் செல்போன் சேவை தொடங்கியுள்ளது. எனினும் வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க எஸ்எம்எஸ் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்துசெய்யப்பட்டது. அத்துடன் காஷ்மீர்,லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் காஷ்மீருக்கு மட்டும் சட்டப்பேரவை இருக்கும். லடாக் பகுதி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கு லடாக் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இனிமேல் லடாக் பகுதி விரைந்து முன்னேற்றம் காணும் என்று அப்பகுதியில் வாழும் பெரும்பான்மை புத்த மதத்தினர் கருத்துத் தெரிவித்தனர்.இதற்கிடையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பயன்படுத்தி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளும், பிரிவினைவாதிகளும் காஷ்மீரில் கலவரம், வன்முறையைத் தூண்ட சதித் திட்டம் தீட்டினர். இந்த சதியை முறியடித்து உயிரிழப்புகளைத் தடுக்க காஷ்மீரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது. தொலைத் தொடர்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தரைவழி தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 9-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை தொடங்கப்பட்டன. ஆனால் எஸ்எம்எஸ் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதை அறிந்த போலீஸார், எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டும் நேற்று முன்தினம் மாலை தடை விதித்தனர்.

பரூக் அப்துல்லா சகோதரி கைது செய்யப்பட்டது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரயா, மகள் சோபியா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் உட்பட சிலரை போலீஸார் கைது செய்தனர். பிற்பகலில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x