Published : 16 Oct 2019 07:54 AM
Last Updated : 16 Oct 2019 07:54 AM

விரைந்து கரையும் சுவிட்சர்லாந்து பனிமலைகள்

ஜெனிவா

உலக சுற்றுலாவுக்கு மிகவும் புகழ்பெற்ற நாடு சுவிட்சர்லாந்து. பசுமை படர்ந்த நிலப் பகுதிகள், பனிமலைகள், வானுயர்ந்த மரங்கள், மலைகள் என இயற்கை கொட்டிக் கிடக்கும் நாடு. அந்த நாட்டில் உள்ள பனிமலைகள் கடந்த 5 ஆண்டுகளில் 10 சதவீதம் அளவுக்கு கரைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள 20 மிகப்பெரிய பனிமலைகளை அளந்து ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல் பனி கரையும் அளவும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பனிமலைகள் 10 சதவீதம் விரைவாகக் கரைந்துள்ளன. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக பனிமலைகள் கரைந்துள்ளன.

காணாமல் போன பனி மலை

கடந்த 12 மாதங்களில் மட்டும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒட்டு மொத்த பனிமலைகளில் 2 சதவீதம் காணாமல் போய்விட்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வுக் கட்டுரையை சுவிட்சர்லாந்து கல்வி மற்றும் அறிவியல் அகடமி தனது இதழில் வெளியிட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பெரும்பாலான பனிமலைகள் இந்த நூற்றாண்டுக்குள் கரைந்து காணாமல் போய்விடும். எனவே, பருவநிலை மாறுபாட்டை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய் வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலை மாறுபாடு

இதற்கு என்ன காரணம் தெரி யுமா மாணவர்களே. பருவநிலை மாறுபாடுதான். வாகனங்களின் அதிகமான புகை, தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்றவற்றால் உலகளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பூமி வெப்பமாகி உள்ளது. பனிமலைகள் உருகும் போது கடல் மட்டம் உயரும்.

அப்போது நிலப்பகுதிகள் பெரும் அபாயத்தைச் சந்திக்கும். இந்தியாவிலும் இமயமலையில் உள்ள பனிமலைகள் கரைந்து கொண்டுதான் இருக்கின்றன. இயற்கையைக் காப்பாற்றினால்தான் மனிதர்கள் உயிர் வாழும் இடமாக பூமி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x