Published : 15 Oct 2019 07:29 AM
Last Updated : 15 Oct 2019 07:29 AM

பிரிட்டன், நார்வே நாடுகளில் உள்ளது போல் பள்ளி பாடத் திட்டத்தில் நீச்சல் பயிற்சியை சேர்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு நிபுணர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி

நார்வே மற்றும் பிரிட்டன் நாட்டின் பள்ளித்திட்டத்தில் நீச்சல் பயிற்சி பாடமாக உள்ளது. அதேபோல், இந்திய பள்ளி பாடத்திலும் நீச்சல் பயிற்சியை சேர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். நீச்சல் மற்றும் நீர் பாதுகாப்பு முறையை பாடத்திட்டத்தில் பிரிட்டன் அரசு கடந்த 1994-ம் ஆண்டு இணைத்தது. அதை தொடர்ந்து, நார்வே அரசும் தங்களின் பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சியை 2015-ம் ஆண்டு கட்டாயமாக்கியது.

இந்தியாவை பொறுத்தவரையில், பல தனியார் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி வழங்க, நீச்சல் குளங்களை வைத்துள்ளன. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, ஒரு நாளில் மட்டும் நீரில் மூழ்கி 3.6 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 80 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

உலகளவில் நீரில் மூழ்கி பலியாகும் எண்ணிக்கையில் கணிசமான அளவு இந்தியாவில்தான் நடக்கிறது. இதில், 3-ல் ஒரு பங்கு, 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள்தான். நீரில் மூழ்கி பலியாவோர் அதிகமாக இளைய வயதுடையவர்களாகதான் இருக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் ஏரி, கிணறு போன்ற நீர்நிலைகளில் மூழ்கி பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் நீரில் மூழ்கி இறப்பவர்களின் கணக்கெடுப்பு செய்யும் குழுவின் உறுப்பினராக இருக்கும் ஜக்னூர் என்பவர், டர்பனில் கடந்த வாரம் நடந்த, ‘நீரில் மூழ்கி பலி தடுப்பு மாநாட்டில்’ பள்ளிகளில் கட்டாய நீச்சல் பாடங்களைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜக்னூர் கூறியதாவது:

நீரில் மூழ்கி பலியாகும் எண்ணிக்கையை தடுக்க, நீரியல் பாதுகாப்பு குறித்து தேசிய அளவில் குழந்தைகளுக்கு அரசு விழிப்புணர்வு செய்ய வேண்டும். நீச்சல் குறித்த அவசியத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க, பள்ளியில் நீச்சல் பயிற்சியை பாடத்திட்டமாக அரசு மாற்ற வேண்டும். உட்கட்டமைப்பு வலுவாக இருக்கும் சிபிஎஸ்இ பள்ளியில் நீச்சல் குளம் உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் பயிற்சியை கட்டாயமாக்கவில்லை. நீரில் மூழ்கும் நபர்களில் 80 சதவீதம் பேர் நீச்சல் தெரியாமல் பலியாகின்றனர்.

நார்வேயில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை எல்லாருக்கும் கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதே போல் நமது நாட்டிலும் கொண்டு வரவேண்டும். இவ்வாறு ஜக்னூர் கூறினார். சமீபத்தில் ராஷ்டிரிய உயிர் காக்கும் சங்கம் (ஆர்எல்எஸ்எஸ்) கேரளாவில் ‘நீச்சல் திட்டம்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், குழந்தைகளுக்கு நீரில் மூழ்குவதில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆர்எல்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் அட்மிரல் புருஷோத்தம் தத் சர்மா கூறுகையில், “நீச்சல் தெரியாதது, குழந்தைகளுக்கு மிக பெரிய பின்னடைவை தருகிறது.

நகர்ப்புற மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்ள சரியான நீச்சல் குளங்கள் இல்லை. நீச்சல் அடிக்க குழந்தைகள் கற்றுக் கொண்டால், உலகளவில் நீரில் மூழ்கி பலியாவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். முறையாக நீச்சல் கற்றுக் கொண்டால் தண்ணீருக்கு உள்ளே வெளியே மற்றும் ஓடும் நிர்நிலைகள் என எதை வேண்டு மென்றாலும் சமாளிக்கலாம்” என்றார்.

இந்தியா போன்ற நாடுகளில் வெள்ளம், இயற்கை பேரிடர் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன. எனவே பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல், பாதுகாப்பு பற்றி கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று பெரும்பான்மையான கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x