Published : 14 Oct 2019 03:51 PM
Last Updated : 14 Oct 2019 03:51 PM

பசியோடு படிக்காதீர்கள்: ஏழை மாணவர்களுக்கு காலை உணவளிக்கும் சென்னை மாநகராட்சியின் ஆரோக்கிய திட்டம்

பிரதிநிதித்துவப்படம்


சென்னை

குடும்பச் சூழல் காரணமாக காலை உணவைச் சாப்பிட வசதியில்லாமலும், படிப்புக்காக நீண்ட தொலைவு பயணித்து வரும் மாணவ, மாணவிகளுக்காகவும் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது சென்னை பெருநகர மாநகராட்சி.

இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 'தி அக்‌ஷய பாத்திர' அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை பெருநகர மாநகராட்சி தொடங்கி, இன்று 16 பள்ளிக்கூடங்களுக்கு விரிவடைந்து நடத்தி வருகிறது. நாள்தோறும் 5 ஆயிரம் மாணவர்கள் வயிறார காலை சிற்றுண்டி சாப்பிட்டு கல்வியைத் தொடர்கிறார்கள்.

சமூகப் பொருளதாரக் காரணங்கள், வறுமை, ஏழ்மை போன்றவற்றால் மாணவர்களால் காலை உணவு சாப்பிட முடிவதில்லை, மேலும், படிக்க வேண்டும் என்ற வைராக்கிய உணர்வோடு காலை உணவைச் சாப்பிட முடியாமலும், கிடைக்காமலும், அதை பொருட்டாகக் கருதாமலும் ஏராளமான குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், அந்த மாணவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக இந்தத் திட்டம் அமைந்திருக்கிறது.

திருவான்மியூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ரோஸலின் கூறுகையில், " பெரும்பாலான மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஏழைகள். நாள்தோறும் உழைத்தால்தான் வருமானம் கிடைக்கும் என்பதால், அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். இதனால், குழந்தைகளால் காலை உணவு செய்து கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள். இதனால் பள்ளிக்கு அருகே வசிக்கும் குழந்தைகள் பட்டினியோடுதான் பள்ளிக்கு வருவார்கள். பள்ளியில் இருந்து வழங்கப்படும் மதிய உணவுக்காகக் காத்திருந்து சாப்பிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுதான் அவர்களின் காலை உணவு" எனத் தெரிவித்தார்.

தரமணியில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெய்குமார் கூறுகையில், " சார், ஏராளமான மாணவர்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் என ரொம்ப தூரத்தில் இருந்து பள்ளிக்கு வர்றாங்க. செம்மஞ்சேரியில் இருந்து பஸ்ல வந்தா ரொம்ப நேரம் ஆகும். நான்கூட அப்படித்தான் வர்றேன். காலையில சாப்பிடறதுக்கு நேரம் இல்லாததால பட்டினியோடுதான் பள்ளிக்கூடத்துக்கு வர்றேன்" என உருக்கமாகத் தெரிவித்தார்

அரசுப் பள்ளிகளில் காலை நேரத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும் என்பது கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டமாக வைத்திருந்தார். ஆனால், பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

ஆனாலும், மாநிலத்தில் பல பள்ளிகள் இந்தத் திட்டத்தை கையில் எடுத்து வறுமையிலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்காக, தொண்டு நிறுவனங்கள், மனிதநேய ஆர்வலர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 'ஸ்பெஷல் கிளாஸ்' படிக்கும் போது, அவர்களுக்கு மாலை நேரத்தில் சுண்டல், பட்டாணி ஆகியவற்றை சென்னை பெருநகர மாநகராட்சி வழங்கி வருகிறது. வழக்கமான மதிய உணவு திட்டம் தொடர்ந்தாலும், கூடுதலாக மாலை நேரத்தில் மாணவர்கள் படிப்பதற்காக சுண்டல் போன்ற சிற்றுண்டியை வழங்குகிறார்கள்.

கொடுங்கையூரில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவருமான பி.கே. இளமாறன் கூறுகையில், " காலை நேரத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும்போது ஏராளமான குழந்தைகள் மயங்கி விழுவதைப் பார்த்திருக்கிறோம்.

அவர்களைத் தூக்கி அமரவைத்து என்ன என்று விசாரிக்கும்போது, காலை சிற்றுண்டி சாப்பிடவில்லை என்று தெரிவிப்பார்கள். சிலரோ முந்தைய நாள் இரவு சாப்பிட்டதுதான். அதன்பின் சாப்பிடவில்லை என்பார்கள்.
வீட்டில் காலை சிற்றுண்டி செய்வதற்கு வசதியில்லை என்று சொல்லும்போது வருத்தமாக இருக்கும். மாணவர்களின் இந்தக் கவலையை தீவிரமாக யோசித்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

சென்னையில் செயல்படும் 'தி அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளை' அமைப்பின் மண்டலத் தலைவர் ஜெய் சைதன்யா தாசா கூறுகையில், "சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே நல்ல சத்தான மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நாங்கள் கூடுதலாக காலை சிற்றுண்டி வழங்குவது இன்னும் சிறப்பு.

இந்தக் காலை சிற்றுண்டி முற்றிலும் பள்ளிக் குழந்தைகளுக்கானது. காலை நேரத்தில் வெறும் வயிற்றோடு , பட்டினியோடும் பள்ளிக்கு வரும் குழந்தைகள், காலை சிற்றுண்டி சாப்பிட வசதியில்லாத குழந்தைகளுக்கு உணவு வழங்க இந்தத் திட்டம் செயல்படுகிறது.

இத்திட்டத்துக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், அதிகமான பள்ளிகள் இதில் சேர ஆர்வமாக இருக்கின்றன. தற்போது 5 ஆயிரம் குழந்தைகள் இதில் பயன்பெறுகிறார்கள். விரைவில் சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்த இருக்கிறோம். எங்களின் சிற்றுண்டியில் இட்லி, பொங்கல், உப்புமா, கிச்சடி ஆகியவை சூடாகவே காலை நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் அடக்க விலை ரூ.12.50. திருவான்மியூரில் உள்ள எங்களின் மிகப்பெரிய சமையல்கூடத்தில் சமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அடுத்த அரை மணிநேரத்தில் உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதை ஆசிரியர்கள் கவனிக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்

தரமணியில் உள்ள சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் எஸ். கீதா கூறுகையில், " காலை நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி, முதல் மணி அடிக்கும் 8.40 மணிக்குள் முடிந்துவிடும்.
பெரும்பாலான மாணவர்களைப் பள்ளிக்கு வந்து காலை உணவு சாப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறோம். எந்த மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகளோ அளவீடுகளோ வைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், " பல பள்ளிகளிடம் இருந்து திட்டம் குறித்து கருத்துகளைக் கேட்டுள்ளோம். அவை கிடைத்தவுடன் அடுத்தடுத்து பல பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்" எனத் தெரிவித்தார்

தமிழக அரசின் பன்முக சிறப்பு மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் காலை உணவின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், " பெரும்பாலான குழந்தைகள் இரவில் விரைவாகவே இரவு உணவை சாப்பிட்டுவிடுவார்கள். காலையில் எழும்போது, ஏறக்குறைய 12 மணிநேரம் வயிறு காலியாக இருக்கும். அதன்பின் காலை சிற்றுண்டியைத் தவிர்ப்பது என்பது, நாளின் முக்கியமான உணவைத் தவிர்ப்பதற்குச் சமம்.

காலை உணவை குழந்தைகள் சாப்பிட முடியாமல் போகும்போது, தவிர்க்கும்போது, பசியோடு இருக்கும்போது அவர்களின் கல்வி கற்கும் திறன், புரிதல், கணிதம் செய்யும் திறன், அவர்களின் பொதுவான குணம் அனைத்தையும் பாதிக்கும். உடல் சோர்வு காரணமாக விளையாட்டில் விருப்பமின்மை ஏற்படுத்தி, உடல்ரீதியான செல்பாட்டைக் குறைக்கும்" எனத் தெரிவித்தார்.

தமிழில்: போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x