Published : 14 Oct 2019 08:23 AM
Last Updated : 14 Oct 2019 08:23 AM

மாணவர்களின் தனித்திறனை கண்டறியுங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் அறிவுரை

மதுரை

ஒவ்வொரு மாணவரிடமும் காணப்படும் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களுக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன் அறிவுரை வழங்கினார். ஹேப்பி ஸ்கூலிங் திட்டம் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மனநலத்தை பேணும் வகையில் எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப நிறுவனம், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து ‘ஹேப்பி ஸ்கூலிங்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி கடந்த ஆண்டு 10 மாநகராட்சி பள்ளிகளில் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 14 பள்ளிகளில் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹேப்பி ஸ்கூலிங்’திட்டத்தின் கீழ் மனநல பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் பாடத்தை நடத்தி மாணவர்களை அதிகமதிப்பெண் எடுக்க வைப்பது மட்டும்கடமையல்ல, மாணவர் களை சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இதற்காக, மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மனநல பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி மதுரை ஸ்டார் ரெஸிடன்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியைத் தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:

தனித்திறனை அடையாளம் காணுங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அந்த தனித்திறமையைக் கண்டறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அதில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் கற்பிப்பது மட்டுமே பணியாக அல்லாமல்மாணவர்களின் பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ளும் அளவு நட்பாகப் பழக வேண்டும்.

‘ஹேப்பி ஸ்கூலிங்’ திட்டத்தின் கீழ் பள்ளிகளில் நான்கு விதமான முறைகள் செயல்படுத்தப்படுகின்றன முதலாவது ஆசிரியர்கள் மாணவர்களிடம் நேரடி கலந்தாய்வு செய்தல், இரண்டாவது மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருத்தல், மூன்றாவது மாணவர்கள் தங்கள் குறைகளை புகார் பெட்டி மூலம் தெரிவித்தல், நான்காவது மாணவர்கள் தங்கள் குறைகளை நேரடியாக ஆசிரியர்களிடம் தெரிவித்தல் ஆகிய நான்கு முறைகள் உள்ளன.

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வரலாற்றில் சிறப்புமிக்க வீரர்களின் கதைகளை எடுத்துச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். ஹேப்பி ஸ்கூலிங் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது தற்கொலைகளை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஹேப்பி ஸ்கூலிங் திட்டம் செயல்படுத்தப்பட்ட 10 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்ததுடன் மாணவர்களிடம் எந்தவொரு தீயபழக்க வழக்கங்களும் இல்லாமல் இருந்துள்ளன.

இவ்வாறு விசாகன் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா, மனநல மருத்துவ நிபுணர் சி.ராமசுப்பிரமணியன், செல்ல முத்து அறக்கட்டளை இயக்குநர் ராஜ குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x