Published : 14 Oct 2019 07:00 AM
Last Updated : 14 Oct 2019 07:00 AM

தொல்லியல் துறை தடை நீக்கத்தால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்

பிரமதர் மோடி - அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு, மாமல்லபுரத்தில் கலைச் சின்னங்களை பொதுமக்கள் பார்க்க தொல்லியல் துறை மீண்டும் அனுமதி வழங்கியதால் நேற்று குடும்பம், குடும்பமாய் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்காக மாமல்லபுரத்தில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இதில், சாலைகள் சீரமைப்பு, குடிநீர் வசதி, சிற்ப வளாகங்களில் அழகுச் செடிகள், நடைபாதை சீரமைப்பு, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம், சாலை நடுவே அலங்கார செடிகள் அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்றன. இதனால், மாமல்லபுரம் புதுப்பொலிவு பெற்றது.

எனினும், தலைவர்களின் வருகையால் அக்.8-ம் தேதி முதல் சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை சனிக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால், மாமல்லபுரத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புல்தரை மீது குடும்பத்துடன் அமர்ந்து ரசித்தனர். அர்ஜுன் தபசு சிற்பத்தின் முன்பு அதிக அளவில் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொல்லியல் துறை வட்டாரங்கள் கூறும்போது, "பொதுமக்கள் கூறுவது ஏற்புடையதுதான்.

கலைச் சின்ன வளாகங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புல்தரையை, சுற்றுலாப் பயணிகள் நாசப்படுத்தி வருகின்றனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே முறையாக பராமரிக்க முடியும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x