Last Updated : 09 Oct, 2019 03:07 PM

 

Published : 09 Oct 2019 03:07 PM
Last Updated : 09 Oct 2019 03:07 PM

கிராமப்புற மாணவர்களுக்கு 67 ஆண்டுகளாக கல்விச்சேவை

மணிக்கட்டிபொட்டலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்தபோது, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி, மணிக்கட்டிபொட்டல், கொட்டாரம், பூதப்பாண்டி, மார்த்தாண்டம் ஆகிய அரசு பள்ளிகள் மட்டுமே இருந்தன. இதனால் பல குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் புத்தகப்பையை சுமந்தவாறு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து, பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.

67 ஆண்டுகள் பழமை இவற்றில் 67 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க மணிக்கட்டிபொட்டல் பள்ளி கிராமப்புற மாணவர்கள் சிரமமின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் தந்தை பொன்னீல வடிவு, பெரியப்பா நீலபெருமாள் ஆகியோரால் தானமாக வழங்கப்பட்ட 22.5 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட்டது. இது குறித்து பொன்னீலன் கூறியதாவது:50 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூடங்களில் சென்று படிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருந்தது.

அப்போது நாகர்கோவில் சுற்றுப்புறப் பகுதியில் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு போதிய இடம் இல்லாமல் இருந்தது. கேரளாவுடன் குமரி மாவட்டம் இணைந்திருந்த நேரத்தில் பலர் எங்களது குடும்பத்தினரை அணுகி பள்ளி அமைக்க 3 ஏக்கர் இடம் கேட்டனர். எனது தந்தையாரும், பெரியப்பாவும் ஊருக்குள் ஒரு பள்ளி அமைத்தால் நமது கிராமம் மட்டுமின்றி, சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பலகிராமங்கள் முன்னேற்றமடையும் எனக்கருதி, தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் 55 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். மீதமுள்ள இடத்தை ஊர் மக்கள் ஆர்வமாக முன்வந்து வழங்கினர்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் ராதாகிருஷ்ணனுடன் எழுத்தாளர் பொன்னீலன்

இதன் பலனாக மணிக்கட்டிபொட்டலில் 1952-ல் அரசு பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில்தான் நானும் படித்தேன். அங்கு படித்த ஏராளமானோர் பெரிய பொறுப்புகளை வகித்துள்ளதுடன் பொதுநலவாதிகளாகவும் உருவாகியுள்ளனர். ஏகாம்பரம் ஐஏஎஸ், விஞ்ஞானி கருணாகரன், இந்திய கப்பல் படையின் நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்ததில் பெரும் பங்காற்றிய தலைமை பொறியாளர் விஜயரங்கன், விஞ்ஞானி பால்பாண்டியன், வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த பாலகிருஷ்ணன், ஐஎஸ் அதிகாரி சுயம்புலிங்கம் உட்பட ஏராளமானோர் கிராமப்புற பள்ளியான இங்கு படித்து, நாட்டுக்குப் பெருமை தேடி கொடுப்பவர்களாக உயர்ந்துள்ளனர்.

தற்போது எண்ணற்ற தனியார் கல்விக்கூடங்களின் போட்டிக்கு மத்தியிலும் மணிகட்டிபொட்டல் அரசு பள்ளியில் 600 மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டவும், கேட் அமைப்பதற்கும் நிதியில்லாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன். 1994-ல் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. விருதுடன் வழங்கிய ரூ.25 ஆயிரத்தை வழங்கினேன். இந்த வாய்ப்பு எனக்கு விருது கிடைத்ததை விட சந்தோஷமாக அமைந்தது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x