Published : 09 Oct 2019 11:03 AM
Last Updated : 09 Oct 2019 11:03 AM

வெளிமாநில கல்வி மையங்களை பார்வையிடும் மாணவர்கள்

கல்விசார் மையங்களைப் பார்வையிடுவதற்காக தமிழக மாணவர்கள் 3,600 பேர் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக அனைத்துமாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் சுடலைகண்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) மூலம் 2019-20-ம் கல்விஆண்டில் ராஷ்டிரிய அவிஷ்கார் அபியான் (ஆர்.ஏ.ஏ) திட்டத்தின் கீழ் அரசு உயர்- மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் Exposure Visiteoutside the State என்ற தலைப்பில் நேரடிக்களப்பயணம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் தலா 30 மாணவர்கள் வீதம்120 கல்வி மாவட்டங்களில் மாணவர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் 3,600 மாணவர்களுக்கு ரூ.72 லட்சம் நிதி கல்வித் துறையால் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை வெளிமாநிலகல்வி நிறுவனங்களைப் பார்வையிட கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஆர்.ஏ.ஏ. திட்டத்தின் கீழ் சமக்ர சிக்ஷா தொடக்கக் கல்வியில் 8-ம் வகுப்பு பயிலும் 960 மாணவர்களுக்கு (ஒரு மாவட்டத்துக்கு 30 மாணவர்கள் வீதம் 32 மாவட்டங்களில் மொத்தம் 960 மாணவர்களுக்கு) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களையும் இத்துடன் இணைத்து அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். இத்திட்டத்தின்படி கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்ட மாணவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

சென்னை,காஞ்சிபுரம் மாவட்ட மாணவர்கள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கும், அரியலூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கும், தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி,நாமக்கல், சேலம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட மாணவர்கள் கர்நாடக மாநிலம் மைசூருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

அந்தந்த மாவட்ட ஐஆர்சிடிசி நிறுவன அலுவலர்கள் மாவட்டங்களைத் தொடர்பு கொண்டு பயண தேதி, நேரம் மற்றும் இதர விவரங்களைத் தெரிவிப்பார்கள். ஆசிரியர்கள் தங்களது பயண தேதிக்கு ஏற்றவாறு தங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியை ஐஆர்சிடிசி-க்கு ஈசிஎஸ் அல்லது காசோலை மூலம் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x