Published : 07 Oct 2019 06:37 PM
Last Updated : 07 Oct 2019 06:37 PM

மரம் வளர்க்க மாணவர்களை ஊக்குவிக்கும் தமிழ் ஆசிரியர்

மதுரை
பள்ளிக்குச் சென்றோம், கற்பித்தோம், ஊதியம் பெற்றோம் என்ற குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாமல் மாணவர்களைக் கல்வியைக் கடந்து சுற்றுச்சூழலையும், பசுமையையும் நேசிக்க வைக்கிறார் மதுரை இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் மு.மகேந்திரபாபு.

அப்பள்ளியின் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள இவர் தங்கள் மாணவ, மாணவிகள் பிறந்தநாளில் மரக்கன்று ஒன்றை அவர்களிடம் கொடுத்து பள்ளி வளாகத்தில் நட வைக்கிறார். அதனால், இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல பள்ளி பசுமைப் பள்ளியாகக் காணப்படுகிறது.

குழந்தைகளுடைய பசுமை நேசம் பள்ளியுடன் நின்றுவிடாமல் அவர்கள் வீட்டிலும் மரங்களை நடுவதற்கு ஊக்குவிக்க ‘என் வீடு, என் மரம்’ திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில், தன்னிடம் படிக்கும் குழந்தைகள் வீட்டில் மரம் வளர்க்க இடமிருந்தால் ஒரு மரக்கன்றை கொடுத்து அனுப்பி அவர்கள் வீட்டிலும் மரக்கன்றுகள் நட வைக்கிறார். அது மட்டுமில்லாது, பள்ளிக்கு நடந்துவரும் சாலையோரத்தில் மரக்கன்றுகளையும் நட வைக்கிறார்.

புத்தகப் படிப்புடன் குழந்தைகள் முடங்கிவிடாமல் அவர்களை மரங்கள் அதிகம் காணப்படும் கல்லூரிகளுக்கும், காடுகளுக்கும் ‘மரங்களை அறியும் பயணம்’ மேற்கொண்டு மரங்களுடைய இயல்பு, அதன் பயன்களையும், பாரம்பரியத்தையும் சொல்லி விழிப்புணர்வு செய்கிறார். அதோடு, மாணவர்களை புதுமையான முறை யில் படிக்கவும் வைக்கிறார்.

மாணவர்களுக்கு தமிழ் பாடத்தின் உரைநடை, இலக்கணம், புதுக்கவிதை பாடங்களை நடத்தும்போது வெறுமனே வாசித்து வகுப்பு எடுக்காமல் அந்த பாடங்களுடன் தொடர்புடையவற்றை நேரடியாகச் சென்று வீடியோ எடுத்து அதை மாணவர்களுக்கு ப்ரொஜெக்டரில் காட்சிப் படுத்தி பாடம் நடத்துகிறார்.

இதற்காகப் பள்ளி விடுமுறை நாட்களில் காடு, கடல், புல்வெளிப் பிரதேசங்கள், சுற்றுலா ஸ்தலங்கள், வயல் வெளிகளைத் தேடிச் சென்று
வீடியோகப் பதிவு செய்து, மாணவர்களுக்காகவே கிரீன் தமிழ் ‘யூ டியூப்’ சேனல் ஒன்றும் நடத்துகிறார்.

மகேந்திரபாபு பேசுகையில், ‘‘பள்ளியில் கொண்டாடப்படும் ஒவ்வொரு விழாவையும் நினைவுபடுத்தும் வகையில், ஒரு மரக்கன்றை பள்ளிக் குழந்தைகளை வைத்தே நட வைப்போம். அந்த மரத்துக்கு தேசத் தலைவர்கள் பெயர்களை சூட்டி மகிழ்வோம். நான் சுற்றுச்சூழலையும், மரம்வளர்ப்பையும் வலியுறுத்தி இதுவரை 25 பாடல்களை எழுதி இரண்டு ஆல்பம் தயாரித்து சிடி-யாக வெளியிட்டுள்ளேன்.

2004-ல் ‘மரமும், மனிதமும்’ என்றதலைப்பிலும், 2006-ல் ‘மண்ணே மரமே வணக்கம்’ என்ற மற்றொரு தலைப்பிலும் இந்த ஆல்பங்களை வெளியிட்டேன். இந்த ஆல்பத்தை வெளியிட்டதோடு நிற்காமல் அந்த பாடல்களையும், அதில் சொல்லப்படும் கருத்துகளையும் பள்ளிக் குழந்தைகளிடம் பாடி விழிப்புணர்வு செய்கிறேன்.

பள்ளி விழாக்களிலும், மாநில, மாவட்ட அளவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் பொருள் அறியாத சினிமா பாடல்களுக்கு பதில் இயற்கை, மரம், சுற்றுச்சூழல் பற்றிய என்னுடைய ஆல்பம் பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடி வெற்றி பெற்றுள்ளனர். நான் பணிபுரியும் பள்ளிக்கு செல்லும் பாதையில் அன்னை சத்தியா நகரில் இருந்து இளமனூர் வரை 150 மரக்கன்றுகளை ஒன்றரை கி.மீ., தூரத்துக்கு மாணவர்களையும், பஞ்சாயத்து 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களையும் கொண்டு நடவைத்துள்ளேன்.

தற்போது அந்த மரக்கன்றுகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளது. இன்னும் 5, 6 ஆண்டுகளில் இந்த சாலை பசுஞ்சோலையாகிவிடும்.
என்னோட பள்ளி குழந்தைகளுக்காக இந்த சேனலை நடத்துகிறேன். வெறுமனே பாடங்களை நடத்தினால் குழந்தைகள் வகுப்பறையில் சோர்வடைவார்கள். கதைகள் சொல்லி பாடங்களை வீடியோவாக காட்சிப்படுத்தி நடத்தும்போது இயல்பாகவே குழந்தைகள் உற்சாகத்துடன் பாடங்களை கேட்பார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x