Published : 07 Oct 2019 06:12 PM
Last Updated : 07 Oct 2019 06:12 PM

சேவாலயா பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா; உண்மையும் மனவலிமையும் இருந்தால் நேர்மையாக வாழலாம்: ஓய்வுபெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பேச்சு

திருவள்ளூர்

உண்மையும் மனவலிமையும் இருந்தால் நேர்மையாக வாழ லாம் என்று சேவாலயா பள்ளியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில், ஓய்வுபெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராம் மோகன் ராவ் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே அமைந்துள்ள சேவாலயா சேவை மையத்தின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், ஓய்வுபெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராம்மோகன் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி அளவில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு மற்றும் விவாதப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
மகாத்மா காந்தியின் சுயசரிதையை ஒருவர் முழுமையாக புரிந்து கொண்டு படித்தால் அவர் தம் வாழ்நாளில் தீயசெயல்களில் ஈடுபடமாட்டார். பள்ளியில் காந்தியின் சுயசரிதையை பாடதிட்டமாக கொண்டு வர வேண்டும். காந்தி தனது வாழ்நாளில் உண்மையாகவும், மனவலிமை மிக்கவராகவும், காலந்தவறாமையிலும் வெற்றிகண்டவர். அவருக்கு காலதாமதம் என்பது அறவே பிடிக்காது. அதனால் இடுப்பிலேயே கடிகாரத்தைக் கட்டிக்கொண்டுள்ளார்.

காந்திஜியை கிரிக்கெட் விளையாட்டில் நடுவராக நிறுத்துவர், ஏனெனில் அவர் பொய் சொல்லவே மாட்டார். இதிலிருந்து தன் நண்பர்களிடம் எப்படியான நற்பெயரை அவர் பெற்றிருந்தார் என்பதை அறியலாம். ஒரு முறை காந்தியின் அண்ணன் அவரை அடித்துவிட்டார். இதை காந்திதன் அம்மாவிடம் கூற அவரின் அம்மாவோ "நீயும் திருப்பி இரண்டு அடிகொடுத்துவிடு" என விளையாட்டாக கூறினார். ஆனால் காந்தி தன் அம்மாவிடம் அகிம்சை வழியில் நீங்கள் தானே வாழ சொன்னீர்கள். தற்போது நீங்களே அதை மீறச் சொல்கிறீர்களே" என திருப்பி கேட்டார். வெறும் கல்வி மட்டுமே ஒரு வரை முன்னேற்றாது. சத்தியமும் நேர்மையுமே அவரை வழிநடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் நாடகம் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு காட்டப்பட்டது. மேலும் குழந்தைகள் திரைப்படக்குழு சார்பாகத் தயாரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வரலாற்று ஆவணப்படமும் திரையிடப்பட்டது. சேவாலயா சார்பில் காந்தியின் உருவப் படத்தை வைத்து சேவாலயா ரதம் தயாரிக்கப்பட்டு ரதப் பயணமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த இரதத்தை, திருநின்றவூரை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு கொண்டு சென்று காந்தியின் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை சேவாலயா பள்ளி மாணவர்கள் நாடக வடிவில் நடித்துக்காட்ட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில், சேவாலயா ஆலோசகர் அமர்சந்த் ஜெயின், அறங்காவலர் அன்ன பூர்ணா, ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x