

பல்திறன் இயல்புநிலை அடைந்துவிட்ட இன்றைய குழந்தைகளை மனப்பாடம் என்கின்ற ஒற்றை திறன் கொண்டு அளவீடு செய்யும் கல்வி முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். - கென் ராபின்சன்
காதுகளில் இசை ஒலிப் பானைப் பொருத்திக்கொண்டு, எதிரில் தொலைக்காட்சியில் ஏதோ காட்சிகள் அசைந்தாட, கையில் திறன்பேசி தேடலுக்கு இடையில் வீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருக்கின்றனர் இன்றைய குழந்தைகள். இப்படி ஒரே நேரத்தில் இசையைக் கேட்டும், தொலைக்காட்சியைப் பார்த்தும், பாடத்தில் கவனம் செலுத்தி எழுதியும் நம்மால் இருந்திருக்க முடியுமா? பல்திறன் என்பது புதிய தலைமுறையின் அடையாளம் என்பதை மறுக்க முடியுமா?
சுயசிந்தனைக் கல்வி: அறிவு என நாம் நம்பும் தகவல்களை மனப் பாடம் செய்ய வைத்து, ஒவ்வொரு குழந்தையின் மூளையைத் தகவல் களஞ்சியமாக மாற்றுவதைக் கல்வி என இதுவரை நினைத்தோம். சாட் ஜிபிடி யுகத்தில் நீங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண் டியது தகவல்களை அல்ல, படைப்பாற்றலை மட்டுமே என்கிறார் கென் ராபின்சன். இவர் எழுதிய, ‘படைப்பாக்கப் பள்ளிகள்’ (Creative Schools) புத்தகம் இன்றைய கல்விச் சிக்கல்களுக்கு அசத்தலான தீர்வுகளை அடுக்குகிறது.
ஒரேமாதிரியான தேர்வுகள் (Standardized Tests) குழந்தையின் சிந்தனையை முடக்கிவிடுகின்றன. குழந்தையின் கற்பனை வளம், சுயசிந்தனையை ஊக்குவிப்பதாகக் கல்வி இருக்க வேண்டும். நம் முன்னே கொட்டிக் கிடக்கும் தகவல்களுக்குள் எது உண்மை, எது உண்மைக்குப் புறம்பானது என்பதைக் கண்டறியும் ஆற்றலை கல்வி உங்கள் குழந்தையிடம் வளர்க்க வேண்டும்.
இந்தத் திறன்பேசி யுகத்தில், பெரும் தரவு யுகத்தில், விளம்பர யுகத்தில் உண்மை நிலையைக் கண்டறியும் திறன்களைக் குழந்தையிடம் வளர்ப்பது கல்வியின் நோக்கமாக மட்டுமல்ல, அடிப்படையாக இருக்க வேண்டும். அதற்காக கென் ராபின்சன் முன்வைப்பது தனிப்பட்ட சுயசிந்தனைக் கல்வி.
சகலகலா ஆசிரியர்: அறிவியலோடு, கலை, வரலாறு, நாடகம், ஓவியம், இசை ஆகியவற்றைக் கல்வியில் இணைக்கும் திட்டத்தை இவர் முன்மொழிகிறார். தேர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் செயல்பாட்டு (Project- Based) அடிப்படையிலான சுயஅனுபவம் சார்ந்த, சிக்கல்-தீர்வுகளை உள்ளடக்கிய கல்வி வேண்டும். அதில் குழு மனப் பான்மையை வளர்க்கும், தலைமைப்பண்பு அடிப்படையிலான மாற்று வழிகளில் குழந்தை களை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிறார்.
ஆசிரியர் கங்காணிபோல் இல்லாமல் வழிகாட்டி யாக, தேடலை ஊக்குவிப்பவராக, கலை வித்தகராக இருத்தல் வேண்டும். பாடம் நடத்துவதோடு ஓவியராகவோ, இசைக் கலைஞராகவோ, நாடகக் கலைஞராகவோ, அறிவியல் செயல் பாட்டாளராகவோ ஏதாவது ஒரு வகையில் படைப்பூக்கத்தோடு தொடர்பு டையவராக ஒவ்வோர் ஆசிரியரும் இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் மத்தியில் அவர்களால் சுயசிந்தனையைத் தூண்ட முடியும்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com