

படைப்பாற்றலை மறுக்கும் மனப் பாடத்தை ஆதரிக்கும் நச்சு கல்வி முறையோடு ஒத்துழைக்காதவர்கள், கல்வியின் வெற்றி என்பது வகுப்பறை சாகசங்களில்தான் இருக்கிறது என நம்புகிறவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் - டேவ் பர்கஸ் கல்லூரி வாழ்க்கை பற்றி எடுக்கப்பட்ட ‘நண்பன்’ திரைப்படத்தின் ஒரு காட்சி நம் வகுப்பறைகளின் பலவீனத்தை அச்சு அசலாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும். வகுப்பறையில் பேராசிரியர் இயந்திரத்தனமாக பாடம் நடத்திக் (கத்தி) கொண்டிருப்பார். வளாகத்துக்குச் சற்று வெளியே விடுதி மாணவர்களின் சட்டைகளை இஸ்திரி செய்து கொண்டிருக்கும் தொழிலாளி, வகுப்பறையில் அடுத்தடுத்து அந்தப் பேராசிரியர் எப்படி பேசுவார், என்ன பேசுவார் என்பதை மனப்பாடமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். பத்தாண்டுகளாக இதையேதான் அவர் செய்து கொண்டிருக்கிறார் என்கிற வசனம் வரும்.
இப்போதுகூட பல பள்ளிகளில் ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் குறிப்பு நோட்டைப் பிடுங்கி விட்டால் அவர்களால் பாடம் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ‘ரிப்பீட் மோடில்’ ஒரே பாடத்தை அதே பாணியில் நடத்தி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை “மரணித்த வகுப்பறைகள்” என டேவ் பர்கஸ் அழைக்கிறார்.
நீங்களும் புதியவர், பாடமும் புதிது: “ஒரு கடற்கொள்ளையர்போல் கற்றுக் கொடுங்கள்” (TEACH LIKE A PIRATE) என்னும் இவரது புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கான சங்கம், இலங்கை கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆசிரியர் மாநாட்டில் டேவ் பர்கஸ்-ஐ சந்தித்தேன். அவரும் பள்ளி ஆசிரியர்தான். என்றாலும் அச்சம் அற்றவர். வகுப்பறை நோக்கங்களோடு தன்னை பிணைத்துக் கொள்பவர்.
பாடம் ஒன்றுதான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஓம்ஸ் விதியை மாற்ற முடியுமா? நீரின்றி அமையாது உலகு என்றவர் திருவள்ளுவர் என்பதை மாற்ற முடியுமா? ஆனால், ஒவ்வொரு முறையும் அந்தப் பாடத்தை நீங்கள் நடத்தும்போது எதிரில் உட்கார்ந்திருக்கும் குழந்தை களைப் பாருங்கள். அவர்கள் மாறு பட்டவர்கள். பல்வேறு சமூகங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை நீங்களும் புதியவர், நீங்கள் சொல்லப்போகும் பாடமும் புதிது என்றே இந்தப் புத்தகம் தொடங்குகிறது.
ஊக்கமளிக்கும் கற்பித்தலின் சாகசங்கள் பற்றி டேவ் விரிவாகப் பேசுகிறார். கடற்கொள்ளையர்போல் கற்பிப்பது என்றால் என்ன? சாதாரணமாக வரையறுக்கப்படும் நேர்த்தியான வாழ்க்கையோடு அவர்கள்சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. கடற்கொள்ளை யர்கள் துணிச்சல்காரர்கள், சாகசக்காரர்கள் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத அறியப்படாத பிரதேசங்களுக்குள் நுழையத் தயாராக இருப்பவர்கள். ஓர் ஆசிரியர் அப்படித்தான் இருக்க வேண்டும். துணிச்சலாக தங்களுக்குப் பரிச்சயமற்ற இருண்ட பிரதேசங்களுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்லுகின்ற சாகச வெறியராக இருக்க வேண்டும். அவர்தான் ஆசிரியராக வெற்றி பெறுகிறார்.
பாடம் அல்ல விளையாட்டு: இந்தப் புத்தகத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு கடற்கொள்ளையர்போல கற்பிப்பது என்றால் என்ன என்பதை விளக்குகிறது. ஆங்கில எழுத்துகளான பி, ஐ, ஆர், எ, டி, ஈ என ஒவ்வோர் எழுத்துக்கும் ஆசிரியரின் ஒவ்வொரு பண்பு நலனையும் விவரிக்கிறது. சுவாரசிய மற்ற பாடமாக இருப்பினும் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும்படியான சம்பவங்களைப் பாடத்தோடு இணைப்பதன் மூலம் ஒரு சிறு பொறியை வகுப்பில் பற்ற வைத்துப் பாருங்கள். மீதி வேலையை மாணவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் முழுவதும் எடுத்துக்காட்டுகளால் ஆனவை.
சதவிகித கணக்கை நடத்தும் ஆசிரியர் அது தேர்வில் வரும் என்று மிரட்டுவதைவிட அந்தக் கணக்கை கிரிக்கெட் விளையாட்டு ஸ்கோர் பலகையோடு இணைத்துவிட்டால் போதும். நாம் வியந்து போகும் அளவுக்கு அந்தக் கணக்கை மாணவர்களே புதிய விதங்களில் மாற்றி அமைத்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் நடத்தும் பாடம் குழந்தைகளின் விளையாட்டாக மாறவில்லை என்றால், அது சாகச வகுப்பறை அல்ல என்று எழுதும் டேவ் இந்நூல் முழுவதும் அதற்கான நூற்றுக்கணக்கான உதாரணங்களை அடுக்கிச் செல்கிறார். ஒவ்வொரு சிறந்த ஆசிரியரும் ஒரு படைப்பாக்க சாகச மேதை. அத்தகைய ஆசிரியர் கிடைக்கப்பெற்ற வகுப்பறை இன்றைய தேவை.
கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்.