

தமிழக முதல்வரின் கனவு திட்டமான, ‘நான் முதல்வன் திட்ட’த்தின் கீழ் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது, லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழகத்தில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்காக, கல்லூரிகள் மூலம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை திறன் மேம்பாட்டுக்கழகம் பெற்றது. அப்போது பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகளை நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், அந்த 100 பேருக்கும் ஆன்லைன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ, மாணவிகள் லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த 9-ம் தேதி அதிகாலை மாணவ, மாணவிகள் சென்னையில் இருந்து லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர். கடந்த 16-ம் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பயிற்சியை நிறைவு செய்த 25 மாணவ, மாணவிகள் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மாணவ, மாணவிகளை குடும்பத்தினர், நண்பர்கள் வரவேற்றனர்.
சென்னை திரும்பிய மாணவர்கள் கூறுகையில், “நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இணைந்து பயிற்சிகள் பெற்றதன் மூலம், வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வெளிநாடு சென்றது புது அனுபவமாக இருந்தது. முதல் முறையாக விமானத்தில் சென்றோம். இந்த புதிய அனுபவத்தை ஏற்
படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்
கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றனர்.
அனுபவங்களை பகிர்ந்தனர் - தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் லண்டன் சென்று பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய 25 மாணவ, மாணவிகள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இவர்களில் 20 மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் படிக்கின்றனர். அவர்களில் சுஜாதா குப்புசாமி மற்றும் கிருத்திகா துளசிமணி ஆகிய 2 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள், செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே அத்திட்டம் எங்களுக்கு பல்வேறு வகையில் உதவியாய் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல படிப்புகளை கற்றுக்கொண்டு, எங்களது திறன்களை மேம்படுத்தி கொண்டு வருகிறோம். தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களில் பணிவாய்ப்புகளையும் பெற்று வருகிறோம்.
சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு - குறிப்பாக, சர்வதேச அளவிலான சாரணர் திட்டம் மூலம் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சென்று, அங்குள்ள பேராசிரியர்கள், மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளோம். இதன்மூலம் பெற்ற திறனறிவுகளை என்னுடைய பெயரில் இடம்பெற செய்து, உலகளாவிய பணியாளர்களுக்கு எங்களை நிரூபித்திருக்கிறோம். இதனால் சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அந்தவகையில் இந்த திட்டத்தை உருவாக்கி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. முதல்வரை சந்திக்கும் போது இத்திட்டத்தில் உள்ள நிறை, குறைகளையும், நாங்கள் பெற்ற அனுபவத்தையும் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து எங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுமா என்பது குறித்தும் விசாரித்தார்” என்றனர்.