

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழ்மை காரணமாக அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படிக்க முடியாமல் அவதிப்பட்டார் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி அனுஷ்கா. இதுகுறித்த செய்தி ‘இந்து தமிழ் திசை’யின் ‘வெற்றிக்கொடி’ பள்ளி நாளிதழில் வெளியானது.
இது, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் மாணவி யின் கல்விப் பயணத்தில் ஒளி பிறந்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி மன மார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியம், திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிப்பவர் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி கு.அனுஷ்கா. தந்தை இல்லை. தாய் சகுந்தலாவுக்கு 100 நாள் வேலைதான் வாழ்வாதாரம்.
வீட்டில் மின்சார வசதி இல்லா ததால், நன்றாகப் படிக்கும் இந்த மாணவி தினமும் வீட்டுப்பாடம் எழுத முடியாமல் அவதிப்பட்டார். இதையறிந்த வகுப்பு ஆசிரியரும் அறிவியல் ஆசிரியருமான சு.காந்திராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் சிவகளை மற்றும் சக ஆசிரியர்களுடன் மாணவியின் நிலை குறித்து விவாதித்தார். அதன் தொடர்ச்சியாக இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை கொண்டு ரூ.1,500 மதிப்பிலான சோலார் விளக்கு வாங்கிக் கொடுத்தனர்.
முதல்வர் உத்தரவு
இந்த முன்னெடுப்பால் மாணவியின் கல்விப் பயணத்தில் சிறிய வெளிச்சம் கிடைத்தது. இந்த செய்தி, ‘வெற்றிக்கொடி’ நாளிதழில் கடந்தாண்டு நவம்பர் 16-ம் தேதி பிரசுரமானது. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், கோடிதண்டலத்தில் வசிக்கும் மாணவி அனுஷ்காவின் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்தது. வீடு புறம்போக்கு நிலத்தில் அமைந்திருந்தாலும் மாணவியின் படிப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு நேர்வாக மின் இணைப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
"வி கேர் டிரஸ்ட்" மின் கம்பம்அமைத்துக் கொடுத்தது. இப்பள்ளியில் படித்து தற்போது மின் வாரியத்தில் பணிபுரியும் கவியரசன் மின்சார மீட்டர், வயரிங் செலவை ஏற்றுக் கொண்டார். மின் வசதியால் கடந்த 16-ம் தேதி அனுஷ்காவின் வீட்டுக்கு மட்டுமல்ல அவரது கல்விப்பயணத்திலும் பிரகாசமான வெளிச்சம் கிடைத்தது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆசிரியர்கள், மாணவர்களின் முன்னெடுப்பால் இந்த மாணவியின் வாழ்வில் ஒளி பிறந்துள்ளது. இதற்காக, தங்கள் வீட்டுக்கு மின்வசதி கிடைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும், பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாணவி அனுஷ்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.