மனங்களை வாசிப்போம்

மனங்களை வாசிப்போம்
Updated on
2 min read

வகுப்பறையில் பாடப்பகுதிகள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பது மிகவும் சிந்திக்கக்கூடிய மற்றும் தேவையான ஒன்றும் கூட. ஒரு வகுப்பறையில் முப்பது மாணவர்கள் உள்ளனர் என்றால், நாற்பது வகையான பின்னணியில் வளர்ந்த குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை நோக்கிய கனவுகளோடு நம்மோடு பயணிக்க காத்திருக்கின்றனர் என்பதை நாம் ஒவ்வொரு நிமிடமும் நினைத்துப் பார்க்க தவறிவிடக்கூடாது. நம் மீதான‌ நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு ஆசானுக்கும் உண்டு.

பாடப் புத்தகங்கள் கருவியே

பாடப்புத்தகங்கள் ஆசிரியர்களுக் கான ஒரு சிறு கருவி என்பதுதான். அப்பாட புத்தகங்களை மட்டுமே கடவுளாகக் கொண்டு வழிபட வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறுகல்வியாளர்களும், பல்வேறு எழுத்தாளர்களும், இத்தகைய மாற்றுக் கல்விக்கான சிந்தனைகளையே விதைகளாக அள்ளித் தெளிக்கின்றனர். பாடப் பகுதிகள் புரியாமலே மதிப்பெண்ணாக செரித்து விடுவது தக்க முறையன்று.

பாடப் பகுதிகளை மிகவும் எளிமையாக கொண்டு சேர்ப்பது எவ்வாறு? படைப்பாற்றலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அதே அளவுக்கு மதிப்பெண்ணை பெற வைத்து பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தக்கூடிய பொறுப்பும் பாடப் பகுதிகளுக்கு உள்ளது.

சிறு விளையாட்டுகள்

பாடப்பகுதிகள் சிறு சிறு விளையாட்டுகளோடு தொடங்கும்போது, புத்துணர்வையும் குதூகலமான மனநிலையையும் உருவாக்கும். நாள்முழுக்க அமர்ந்து கவனிக்கும் இயந்திரத்தனத்தை சுறுசுறுப்பாகமாற்றும். புதுப்புது வகையான விளையாட்டுகளை‌ அன்றாடம் கொண்டு செல்வது என்பது சற்றே சிரமமாக இருந்தாலும் எப்பொழுதெல்லாம் இடைவெளி கிடைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அவற்றை இட்டு நிரப்புவதற்கு கையாளப்படும் மந்திர கோல் கதைகள் தான். ஒரு வாக்கியத்தைக் கொடுத்து குழந்தைகளைத் தொடரச் செய்தால் சுயமாக சிந்திக்க ஏதுவாகும். ஒருவரி கொடுத்து எழுதச் சொல்லும் போது பல கதைகள் உருவாகும்.

கற்பனையை தூண்டல்

மெல்ல கற்கும் குழந்தைகள் எழுதுவதற்கு தடுமாறுவார்கள். வாசிப்பதற்கு தயங்குவார்கள். அதே குழந்தைகளை நடிக்கவோ, பேசவோ, பாடலாக பாடவோ என மாற்று வழியைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய திறன் அடிப்படையில் வழங்கினால் மிகவும் மகிழ்ச்சியோடு அதனைக் கை கொள்வார்கள். பாடப் புத்தகங்களின் மீது இருக்கும் பய உணர்வை போக்குவதே கற்பித்தலின் நோக்கமாக இருக்க வேண்டும்.

சுய தேடலைக் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துவது கற்றலை மிகமிக எளிமையாக்கும். பாரதியின் கவிதைகளில் ஏதேனும் ஒரு கருத்தினை குறிப்பிட்டு அதுதொடர்பான பாடல் வரிகளை தேடச் செய்தல் மூலம் சுய தேடலை ஊக்குவிக்கலாம். சுய தேடலையும், சுய சிந்தனையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தினால் பாடப்பகுதிகள் வசப்படும். தேர்வுகளை மிக எளிமையாகக் கையாள முடியும்.

சொல் வளம் பெருக்குதல்

கற்றலை எளிமைப்படுத்த சொல் வளத்தைப் பெருக்க வேண்டும். ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள் தேட தமிழ்வழி கல்வி கூறுவது போல, தாய்மொழியைப் பிழையற எழுத, பேச, சிந்திக்க புதிய புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்த வேண்டும். பொருள் புரிவதால் எழுத்து, பேச்சு வழக்கில் சொற்களஞ்சியம் பெருகும். சிந்தனை விரிவடையும். கற்பனை மேம்படும். புதிய முயற்சிகளைக் கையாள்வதன் நோக்கம் பழையனவற்றை மீட்டு எடுப்பதன் தொடக்கமாக இருக்கும்.

சுய சிந்தனை புதிய சிறகுகளை முகிழ்க்க வைக்கும். சுமையற்ற சுவையான சிறகசைப்பை ரசிக்க ஏதுவாக்கும். சிந்தனைகளை விரிவாக்கம் செய்ய புதிய பாதைகளை உருவாக்குவோம். மொழியின் செழுமையைப் பிஞ்சு உள்ளங்களில் கற்பனையாக உரு கொடுப்போம். மொழி அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுக்கும்.

கட்டுரையாளர், ஆசிரியர்,

எஸ்.ஆர்.வி.சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி

பிராட்டியூர், திருச்சி மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in