தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக அரசு பள்ளி மாணவர்கள் மாற வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை பள்ளிகளில் 12-ம்வகுப்பு பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னைரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கலந்துகொண்டு 259 மாணவர்களுக்கு ரூ.49 லட்சத்து 18 ஆயிரத்தைகல்வி ஊக்கத் தொகையாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பள்ளிகளில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் அதற்குஉறுதுணையாக இருந்து வழி நடத்திய ஆசிரியர்கள் மற்றும் இளைஞர் பாராளுமன்றக் குழு சபையினை பள்ளிகளுக்கு இடையே சிறப்பாக நிகழ்த்திய சபாநாயகர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

கூடுதல் நிதி: இவ்விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது முதல் ஆட்சியில் பள்ளிக் கல்வி வரை இலவசமாக இருந்ததை பின்னர் உயர்கல்வி வரை இலவசமாக மாற்றினார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.34 ஆயிரம் கோடியை தமிழக முதல்வர் வழங்கி உள்ளார்.

மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசுபள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்கள்தான். அவர்கள் மிகப்பெரிய இடத்திற்கு இன்று வந்திருக்கிறார்கள் என்பதை மாணவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட கருணாநிதி உத்தரவிட்டார். அவர் காலத்தில் இருந்ததைவிட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கிறார். சென்னை மாநகரில் பள்ளிக் கட்டிடங்களை மேம்படுத்தவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையானஅனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 ஆயிரம் கூடுதல் வகுப்பறைகளை புதிதாக கட்டுவதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் இன்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இன்று என்ன நிகழ்ச்சி உள்ளது என்று கேட்டார். இந்த நிகழ்ச்சி பற்றி கூறினேன். ஆனால், என்னால் செல்ல இயலாத நிலை உள்ளது, பேசவும் முடியாது என்று சொன்னேன். அதற்கு முதல்வர், நீ நிகழ்ச்சிக்குப் போய் பேச வேண்டாம். அங்கு வந்துள்ள மாணவர்களைப் பாராட்டி வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

மக்களிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பிரிக்கலாம். ஆனால், அழியாச் செல்வமான கல்விச் செல்வத்தை மட்டும் யாராலும் பிரிக்க முடியாது என்று தமிழக முதல்வர் அடிக்கடி கூறுவார். மாணவர்களாகிய நீங்கள் இதை நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். இந்நிகழ்ச்சியில் பரிசுத்தொகை பெறும் அனைவரும் இதனை பரிசுத்தொகை என்று மட்டும்கருதாமல், இது உங்களின் உரிமைத் தொகை என்று கருத வேண்டும்.

படிப்பு ஒன்றே குறிக்கோள்: எங்கள் அனைவருக்கும் பிராண்ட்அம்பாசிடராக தமிழ்நாடு முதல்வர்திகழ்கிறார். அதைப்போல, மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக அரசு பள்ளி மாணவர்கள் மாற வேண்டும். வேறு எதைப் பற்றியும்கவலை கொள்ளாமலும், தவறானபழக்கங்களுக்கு இடம் கொடுக்காமலும், படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு படிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், சென்னைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று உயர்கல்வி முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் 2 மாணவர்களுக்கும், பொறியியல் பயிலும் 76 மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் பயிலும் 132 மாணவர்களுக்கும், செவிலியர் படிப்பு பயிலும் 8 மாணவர்களுக்கும், முதுகலை அறிவியல் பயிலும் ஒரு மாணவருக்கும் என மொத்தம் 259 மாணவர்களுக்கு ரூ.49.18 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in